சிறப்பு செய்திகள்

விடியா ஆட்சியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை

கமிஷன், கலெக்சன், கரப்சன் இது தான். தி.மு.க.வின் தாரக மந்திரம். இன்றைக்கு விடியா தி.மு.க. அரசில் இந்த 7 மாத காலத்தில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு..

கேள்வி: முன்னாள் அமைச்சர் தங்கமணி கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதே.

பதில்: இந்த அரசு கழகம் வீழ்ந்து விடும் என்று நினைத்தார்கள்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் ஆசியோடு இன்றைக்கு நிமிர்ந்து நின்று மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதனை நீங்கள் பார்த்து வருகிறீர்கள்.

இன்றைக்கு சேலம் மாவட்டத்தில் மட்டும் 37 இடங்களிலே கழக அமைப்பு தேர்தல் நடந்தது. எவ்வளவு பிரமாண்டமாக நடந்தது என்று உங்களுக்கே தெரியும். இதனை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனால் தான் ரெய்து நடத்தி வருகிறார்கள்.

கேள்வி: தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது ரெய்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆளுநர் அல்லது நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளதா.

பதில்: சட்ட ரீதியாக சந்திப்போம் என்று சொல்லி விட்டேனே. அம்மா ஆட்சியில் இருந்த போது அப்போதைய முன்னாள் தி.மு.க அமைச்சர்கள் மீது வழக்கு போட்டு வழக்கு நிலுவையிலிருந்தது. இதனை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்கள். இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது தி.மு.க. அரசு தான். வேறு எந்த அரசும் இல்லை.

இன்றைக்கு என்ன நிலை. நீங்கள் ஏன் குறைகளை போட தயங்குகிறீர்கள் என்று தான் எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும் போது எங்களை குறை சொல்லி வந்தீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது குறை சொல்லி வருகிறீர்கள். ஆனால் உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு ஊடகங்களும், பத்திரிக்கைகளும் எடுத்து வைக்கவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

இன்றைக்கு எல்லா துறைகளிலும் லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடி வருகிறது. கமிஷன், கலெக்சன், கரப்சன். இது தான். தி.மு.க.வின் தாரக மந்திரம். இன்றைக்கு இந்த 7 மாத காலத்தில் 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்கள். இது எல்லா துறைக்கும் தெரியும்.

எல்லா ஊடகத்திற்கும் தெரியும், பத்திரிகைக்கும் தெரியும். ஆனால் நீங்கள் தான் (பத்திரிகைகள்) வெளிப்படுத்தவில்லை. நேற்று கூட அறிக்கை விட்டிருந்தேன். மூன்று நாட்களுக்கு ஒருமுறை குவாரிக்கு பர்மிட் வாங்க வேண்டும். உலகத்தில் எங்காவது இதுபோன்ற நடவடிக்கை உண்டா.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை குவாரிக்கு பர்மிட் வாங்கினால் அதற்கு தான் நேரம் சரியாக இருக்கும். அவருக்கு பர்மிட் கிடைக்கவில்லை என்றால் ஜல்லி உற்பத்தி குறையும். ஜல்லி விலை உயரும். இதனால் மக்கள் தான் பாதிப்பார்கள். அம்மாவின் அரசு ஜல்லி உரிமையாளர்களுக்கு 15 நாளைக்கு பர்மிட் வேண்டுமென்றால் அதனை தருவோம். எம்சாண்டுக்கும் இதே நடைமுறை தான்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.