சிறப்பு செய்திகள்

யாருக்கும் எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை – பேரவையில் துணை முதலமைச்சர் விளக்கம்

சென்னை

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு திருத்த சட்டத்தின் மூலம் யாருக்கும் எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்ட முன்வடிவு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம் வருமாறு:-

இந்த விரிவான வளர்ச்சித் திட்டம் இங்கு கொண்டு வரப்படுவதன் நோக்கமே காலதாமதம் இல்லாமல் அந்தத் திட்டம் முழுமையாக குறைந்த கால அவகாசத்தில் முடிக்கப்பட வேண்டும் என்பது தான் இந்தத் திட்டம். உறுப்பினர் வீட்டு வசதித்துறை அமைச்சராக பணிபுரிந்திருக்கிறார். அவருக்கு இந்தத் திட்டம் பற்றி நன்றாகவே தெரியும் என்று நான் நினைக்கிறேன். தெரிந்திருந்தும் சிலபல குறைபாடுகளை சொல்லவேண்டுமென்று உரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.

யாருக்கும் எந்த உரிமையும் மறுக்கப்படவில்லை. சட்டப்பிரிவு 27-ல் உரிமையாளர்களிடம் விசாரணை செய்து சென்னைக்கு அனுப்பி மறுபடியும் அந்தத் திட்டம் முழுமை பெறவேண்டுமெனில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு காலஅவகாசம் ஒரு ஆண்டுக்கு மேலாகி விடுகிறது.

மீண்டும் சட்ட பிரிவு 27-ல் அவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுகின்ற போது சிலர் நிலத்தை விற்றுவிடுவார்கள், உரிமை மாற்றப்பட்டிருக்கும், இப்படி சூழ்நிலை வரும்போது மறுபடியும் அதை முழுமையாக திட்டம் தயாரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகின்ற பொழுது காலவிரயம் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஒரு நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள் திட்டமிட்ட வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில் நகர ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் முழுமை திட்டம் (Master Plan) மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டம் Detailed Development Plan போன்ற சட்டப்படியான திட்டங்கள் தயாரித்து செயல்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. முழுமைத் திட்டம் என்பது ஒரு நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளூர் திட்டப் பகுதி Local Planning Area (LPA) என அறிவிப்புச் செய்து அப்பகுதி முழுமைக்கும் தயாரிக்கப்படும் நிலப்பயன்பாடு வரையறுக்கும் விதமான திட்டமாகும்.

சுமார் 20 ஆண்டு காலத்திற்குள் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய மக்கள்தொகை பெருக்கத்தைக் கணக்கிட்டு அதற்கேற்ப தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு செயல்படுத்தவேண்டிய குறைந்தகால திட்டங்கள், நீண்டகால திட்டங்கள் போன்றவற்றை வகுத்து வழங்கும் திட்டமே முழுமைத் திட்டமாகும்.

இத்திட்டத்தின்படி ஒவ்வொரு சர்வே எண் நிலத்திற்கும் குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை, விவசாயம், பூங்கா, விளையாடும் இடம் போன்ற நில உபயோக வகைப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டு அதன்படியே எதிர்கால வளர்ச்சி ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேலும். முழுமைத் திட்டத்தின் எதிர்காலத் தேவையை கருத்தில்கொண்டு போக்குவரத்து சம்பந்தமாக சுற்றுவட்டச் சாலைகள் போன்ற மற்ற பிற வசதிகள் ஏற்படுத்த உத்தேசிக்கப்படுகின்றன.

விரிவான வளர்ச்சித் திட்டம். Detailed Development Plan என்பது முழுமைத் திட்டம் Master Plan உள்ள பகுதிக்குள் அமையும். சுமார் 100 ஏக்கரிலிருந்து 400 ஏக்கர் வரையும் உள்ளதாக விரிவாக வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதிகள் திட்டமிட்ட வளர்ச்சியடைவதை உறுதி செய்வதற்காக தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

அத்திட்டத்தில் சிறிய இணைப்புச் சாலைகள், பூங்காக்கள், விளையாடும் இடங்கள் போன்ற பொது உபயோக இடங்களை ஒதுக்கீடு செய்தல், நிலங்களின் பயன்பாட்டை வகைப்படுத்துதல், வளர்ச்சிக் கட்டுப்பாடு விதிகளை வகுத்தல், புராதானச் சின்னங்களைப் பாதுகாத்து பராமரிப்பதற்கான திட்டக்கூறுகள் மற்ற பிறவும் உத்தேசிக்கப்படுகின்றன. விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிப்பதற்கான வழிமுறைகள் நகர ஊரமைப்புச் சட்டம் 1977-ல் வரையறுக்கப்பட்டது.

அந்த வரையறுக்கப்பட்டச் சட்டத்தின் உட்கூறாக ஒன்று சட்டப்பிரிவு 20, உட்பிரிவு-2 (அ) திட்டத்தில் அடங்கும் பகுதியில் அமையும் அனைத்து நிலங்கள் மற்றும் கட்டடங்களுக்கான உரிமையாளர் விவரம் சேகரிக்கப்படவேண்டும். இரண்டாவதாக சட்டப்பிரிவு 20, உட்பிரிவு 2 (இ)-ன்படி அரசு அல்லது தனியாரின் அனைத்து நிலங்களின் பரப்பளவு விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக சட்டப்பிரிவு 21-ன் படி திட்டத்தில் அடங்கும் அனைத்து நிலங்கள் மற்றும் கட்டட உரிமையாளர்களுடன் கலந்து பேசியபின்னர் வகுக்கப்படும் கால அளவிற்குள் விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கப்பட்டு இயக்குநர், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று உள்ளது. இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றி திட்டம் தயாரிப்பது காலதாமதத்திற்கு வழிவகுக்கிறது.

திட்டம் தயாரித்த பின்னர் நிலம் எடுப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் நில உரிமையாளருக்கு அறிவிப்பு வழங்கும்போது, நில உரிமை பல நபர்களுக்கு மாறிவிடுவதால் மீண்டும் சரியான நில உரிமையாளர்களின் விவரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் முன்னர் சேகரித்து வைத்திருந்த நில உரிமையாளர் விவரம் பயனற்றதாக மாறுபட்டு இருக்கக்கூடிய ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுகிறது.

விரிவான வளர்ச்சித் திட்டம் தயாரிக்கும் மேற்காணும் முறையை எளிமைப்படும் விதமாக திட்டம் தயாரிப்பதன் ஆரம்ப நிலையிலேயே திட்டத்தில் உள்ளடங்கும் நிலங்களின் அனைத்து உரிமையாளர்களுடனும் கலந்து பேசவேண்டிய அவசியம் எழவில்லை என அரசு முடிவு செய்தது. அதன்படி கீழ்கண்டவாறு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அதாவது, ஒன்று சட்டப் பிரிவு 20, உட்பிரிவு-2 (அ) மற்றும் 20 உட்பிரிவு 2 (இ) ஆகியன நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று நான் ஏற்கெனவே இந்தச் சட்டப்பேரவையில் தெரிவித்தேன். அது நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், ‘அப்பகுதியில் நிலம் மற்றும் கட்டட உரிமையாளர்களுடன் வகுக்கப்பட்ட வகையில் கலந்து பேசிய பிறகு’ என்னும் வார்த்தைகளை சட்டப் பிரிவு 21-லிருந்து நீக்கம் செய்யப் பெற வேண்டுமென்று இருக்கிறது. சட்டப் பிரிவு 27-ன்கீழ் திட்டம் தயாரிப்பது சம்பந்தமாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் அறிக்கையின்படி திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்சேபனைகளோ மற்றும் ஆலோசனைகளையோ தெரிவிக்க விரும்பும் எந்த ஒரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என உள்ளது.

எனவே, இந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதால் நில உரிமையாளர்களை கலந்து பேசி திட்டம் தயாரித்தல் என்னும் எளிய முறையில் பாதிப்பு ஏதும் இல்லாமல், நடைமுறை மட்டும் எளிமைப்படுத்தப்படும். உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி திட்டம் செயல்படுத்த நிலஎடுப்பு திட்டக் குழுமத்தால் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.