தற்போதைய செய்திகள்

ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி – அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு

சென்னை

ஏழை மாணவர்கள் உயர்கல்வி பெற உதவி வரும் தலைமையாசிரியைக்கு, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம் கார்குடி அரசு பழங்குடியினர் குடியிருப்பு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாவதி , கடந்த 4 வருடங்களாக, படிப்பை தொடர முடியாமல் விளிம்புநிலையில் உள்ள தனது பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பெற உதவி வருகிறார் எனும் செய்தி அறிந்து பெருமகிழ்ச்சியடைந்தேன்.

நாளைய சமுதாயத்தை சிறந்த முறையில் வடிவமைக்கும் உன்னதமான பணியாற்றி வருவதுடன், தனது பள்ளி பழங்குடியின மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த தானே முன்வந்து பல்வேறு முயற்சிகளையும் உதவிகளையும் புரியும் கலாவதிக்கு என் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவில் கூறியுள்ளார்.