தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு விவகாரத்தில் பாசாங்கு நாடகம் நடத்தும் திமுகவின் செயலை மாணவர்கள் நம்பவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை

நீட் தேர்வு விவகாரத்தில் பாசாங்கு நாடகம் நடத்தும் திமுகவின் செயலை மாணவர்கள் நம்பவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை அதிமுக நிர்வாகிகளிடம் வருவாய் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

50 ஆண்டு கால கழக வரலாற்றில் அண்ணா தொழிற்சங்கத்திற்கு தனி கொடி, தனி உறுப்பினர் என தனி அமைப்பாக இருந்து வந்த நிலையில்,அதே போன்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி, அம்மா பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஆகியவை தனி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில், அம்மா பேரவைக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு கட்சியில் தனி அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த முடிவை முதல்வரும், துணை முதல்வரும் எடுத்துள்ளனர். அம்மா செய்த சாதனைகளையும், தற்போது முதல்வர், துணை முதல்வர் செய்து வரும் பணிகளை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இளைஞர்களும், மாணவர்களும் அணிஅணியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அப்படி கழகத்தில் இணையம் விரும்புவர்களுக்கு தனி அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த புதிய உறுப்பினர்சேர்க்கை என்பது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் தனிமனித இடைவெளியுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இதுபோன்றநிகழ்ச்சிகள் கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. கழகத்தில் இணையும் இளைஞர்கள், மாணவ செல்வங்கள் முதல்வர், துணை முதல்வருக்கும் அரசுக்கும் வலுசேர்க்கும் விதமாகவும், தோளோடு தோள் நின்று அரசின் சாதனைகளைமக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்.

ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக எனும் பேரியக்கத்தில் ஏற்கனவே புரட்சி தலைவர் எம்ஜிஆர் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, அம்மா பேரவை என இளைஞர்கள் பணியாற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், புதிதாக இளைஞர்களை கட்சியில் இணைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இளைஞர்களை சேர்ப்பது தொடர்பாக இலக்கே, எண்ணிக்கையை வரையறுக்கப்பட வில்லை.

நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போதே முதல்வர் தனது ஆணிதரமான கருத்தை ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் நீட் எனும் கொடிய பாம்பு நுழைவதற்கு காரணம், திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் என்று, நீட் எனும் பாம்பு தமிழகத்தில் நுழையும் போதே அதனை நுழைய விடாமல் தடுத்திருந்தால் தற்போது தமிழக மாணவர்களுக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சட்டசபையில் உரிய விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆனால் நீட் எனும் கொடிய பாம்பை தமிழகத்தில் நுழைய செய்து விட்டு, தற்போது கடிக்கிறது, கொத்துகிறது என பாசாங்கு நாடகம் நடத்துவதை மாணவர்கள் ஏற்க மாட்டார்கள். மாணவர்களுக்கு நீட் விவகாரத்தில் துரோகம் செய்தது திமுக தான் என்பதை முதல்வர் சட்டசபையில் தனது உரையின் மூலம் தோலுரித்து காட்டியுள்ளார். ஆகவே நீட் விவகாரத்தில் பாசாங்கு நாடகம் நடத்தும் திமுகவின் செயலை மாணவர்கள் நம்பவில்லை.

முதல்வரும், அமைச்சரும் அளித்த ஆணித்தரமான விளக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் வாய்மூடி மவுனியா இருந்து விட்டு, தற்போது முப்பெரும் விழா என்ற பெயரில் அரங்கில் உட்கார்ந்து கொண்டு மீண்டும் நீட் தேர்வு தொடர்பாக பேசி திமுக கபட நாடகம் ஆடுவதை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. மாணவர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்து விட்டு, தற்போது தும்பை விட்டு வாலை பிடிக்கின்ற பாசாங்கு வேலையை திமுக செய்துவருவதை முதல்வர் தோலுரித்து காட்டி விட்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது கட்டுக்குள் உள்ளது, உலகிலேயே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே போன்று நாளொன்று 82 ஆயிரம் வரை அதிகமான பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமும் தமிழகமாக உள்ளது. மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகப்படியாக இருந்த காலக்கட்டத்தில் உரிய நேரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மக்களை அரசு காத்துள்ளது.

தற்போது கூட மக்கள் அச்சமடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். தனி மனித இடைவெளி, முககவசம், கைகளை கழுவுதல், கிருமி நாசினி, பொதுஇடங்களில் அதிகமாக கூடுவதை தவிர்ப்பது போன்ற அரசின் வழிகாட்டுதலை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.

பொதுமுடக்க தளர்வுகள் என்பது அவ்வப்போது மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் அறிவித்து வருகிறார். தமிழகத்திற்கு தேவையான பேரிடர் நிதியை முதல்வர் கடிதம் மூலம் காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின்மூலம் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்திற்கு நிதியை மத்திய அரசு அவ்வபோது வழங்கி வந்தாலும், தேவையான நிதியையும் மத்திய அரசிடம் தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.