சிறப்பு செய்திகள்

மத்திய அரசிடமிருந்து நிதியை விரைவாக பெற நடவடிக்கை – பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சென்னை

மத்திய அரசிடமிருந்து நமக்கு வரவேண்டிய நிதியை விரைவாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மூன்று சட்ட முன்வடிவுகளின் மீது துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:-

உறுப்பினர் பழனிவேல் தியாக ராஜனுடைய பதிலில் இந்தச் சட்டத்தினுடைய ஷரத்துகளில் ஏன் நாம் கூடுதலாக 2 சதவீதம் வருவாய் பற்றாக்குறையை சந்திப்பதற்கு இந்த வருடம் அந்த சதவீதத்தை 3-லிருந்து 5 ஆக அதிகரிப்பதற்கான காரணத்தை அவரே சொல்லிவிட்டார். இடர்பாடான காலங்களில் ஒவ்வொரு அரசும், அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, அந்த சதவீதத்தை 3-லிருந்து 5 ஆக உயர்த்த 2003 நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின்படி அதில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் முதலில் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சொன்னதுபோல், IGST, GST, Compensation போன்ற நிலுவைகளை இந்த அரசு ஏன் முன்கூட்டியே வாங்கவில்லை என்ற கருத்தினை இங்கே பதிய வைத்திருக்கிறார்.இந்த இடர்பாடான காலத்தில், மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, இந்த கொரோனா நிகழ்வு தேசிய பேரிடராக ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, தொடர்ந்து முதலமைச்சர் மத்திய அரசிடமிருந்து நமக்கு வரிப் பகிர்வு மூலமாக வர வேண்டிய அத்துணை நிதிகளையும் கோரி ஒவ்வொரு முறையும் மத்திய அரசுக்கும், பாரத பிரதமருக்கும், மத்திய நிதி அமைச்சருக்கும், தொடர்ந்து கடிதங்கள் அனுப்பிக்கொண்டிருந்தார்.

மத்திய அரசும் கூடியமட்டும் நமக்குச் சேர வேண்டிய தொகைகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும், நாம் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்ற நிதியை நாம் சந்திக்க முடியாத ஒரு சூழ்நிலை இந்த கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.15-வது நிதிக் குழுவைப் பற்றி உறுப்பினர் சொன்னார். அதையும் விரைவாகப் பெறுவதற்கு இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.