தற்போதைய செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

பள்ளிகள் திறப்பு எப்போது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 142- வது பிறந்தநாள் நிகழ்ச்சி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் ஈரோட்டில் உள்ள பெரியார் அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் திருஉருவ சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட கண்காணிப்பாளர் பி.தங்கதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அமைச்சர் சிறுபான்மை இன மக்கள் 45- பேருக்கு 1 கோடி ரூபாயில் கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் நடைபெறும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமையிலான அரசு நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாக செம்மல்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் பேணி பாதுகாத்து வருகின்றது. மேலும் அவர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில், மணிமண்டபங்கள், நினைவு தூண்கள், நினைவு இல்லங்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் அவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அண்ணா நினைவகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவும், செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவும் மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் பொருளாதார சூழல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் பருவநிலை பாடத்திற்கான பாடபுத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் பொறுத்தவரையில் உயர்நீதிமன்ற வழிகாட்டிதல் படி மாணவர்களின் நலன் கருதி 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறாது.தமிழகத்தை பொறுத்தவரையில் இருமொழிக்கொள்கை தான். தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் முழுமையாக வசூலிப்பதாக தற்போது எழுந்த புகாரில் இதுவரை 14 பள்ளிகள் மீது நோட்டீஸ் வழங்கபட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் பதிலை கொண்டு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.

பள்ளிக்கட்டணம் பொறுத்தவரை சிபிஎஸ்சி உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும். பள்ளியை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஏற்கனவே கூறியது போல பெற்றோர்கள் மாணவர்கள் மன நிலை மற்றும் கொரோனோவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.