கடலூர்

காட்டுமன்னார்கோவில் ஏரிகளில் ரூ.74 கோடியில் குடிமராமத்து பணி எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்

கடலூர்

காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரிகளில் ரூ. 74 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள குடிமராமத்து திட்டப்பணிகளை எம்.எல்.ஏக்கள் என்.முருகுமாறன், கே.ஏ.பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பொதுப்பணித்துறை, நீர்வளம் நிலவள திட்டப்பணி, கொள்ளிட உபரி நிலப்பகுதி மற்றும் உலக வங்கி நிதி உதவியுடன் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட வீராணம், நாரைக்கால், சின்ன புங்கனேரி, பொன்னேரி ஆகிய ஏரிகளின் கரை, நீர்வரத்து பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் கண்காணிப்பு பொறியாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். கொள்ளிடம் வடிநில கோட்ட உதவி பொறியாளர் அருணகிரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.74 கோடி மதிப்பீட்டிலான குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வாசு முருகையன், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன், லால்பேட்டை பேரூர் கழக செயலாளர் ஏ.ஆர்.சபியுல்லா மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.