திருவள்ளூர்

நீட் தேர்வு எழுத அடையாள அட்டையை மறந்து வந்த மாணவிக்கு உதவிய காவலருக்கு பரிசு- கே.எஸ்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருவள்ளூர்

நீட் தேர்வு எழுத அடையாள அட்டையை மறந்து வந்த மாணவிக்கு உதவிய காவலருக்கு பரிசை கே.எஸ்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

இதுகுறித்து செய்தி வருமாறு:- திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நீட் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்கள் காலையில் முன்கூட்டியே வந்திருந்தனர். கடும் சோதனைக்கு பின் அனைவரையும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகளின் முதல் கட்ட சோதனையில் போது நீட் நுழைவுத் தேர்வு எழுத வந்த சென்னை புரசைவாக்கத்தில் சேர்ந்த மோனிகா என்கிற மாணவி அசல் அடையாள அட்டை கொண்டு வராததால் சோகத்துடன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிபூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ், மாணவியும், அவரது தாயும் அழைத்து மாணவி எதற்காக அழுது கொண்டிருக்கிறார் என்று கேட்டறிந்தார். அப்பொழுது அசல் அடையாள அட்டை கொண்டு வர மறந்து விட்டதாகவும் அதனை இன்டர்நெட் மையத்தில் பதிவிறக்கம் செய்வதற்கான செல்போனும் தன்னிடம் இல்லை என காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து டிஎஸ்பி அறிவுறுத்தலின் பேரில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மாணவியின் வீட்டிற்கு அசல் அடையாள அட்டை கொண்டு வருவதற்காக மகேஸ்வரன் என்கிற காவலரை அழைத்து பெண்ணின் தாய் ஷீலாவையும் இருவரையும் மாணவியின் வீட்டிற்குச் சென்று அசல் அடையாள அட்டையை இருசக்கர வாகனத்தில் சென்று எடுத்து வருமாறு கூறினார். பின்னர் காவலர் அழைத்துச் சென்று சுமார் 1.30 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் சென்று மாணவியின் அசல் அடையாள அட்டையை கொண்டு வந்து குறித்த நேரத்தில் காவலர் மகேஸ்வரன் மாணவியிடம் வழங்கினார்.

இதை அடுத்து அழுது கொண்டிருந்த மாணவி உற்சாகத்துடன் தேர்வு எழுத சென்ற செயலை பாராட்டி கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார், காவலர் மகேஸ்வரனை அழைத்து விலை உயர்ந்த கை கடிகாரத்தை பரிசாக வழங்கினார்.

மேலும் இரண்டு காவல்துறை துணை கண்காணிப்பாளர்களுக்கு ரமேஷ் கேடயம் வழங்கினார். ஒரு மாணவியின் நீட் கல்வி தேர்வுக்கு உதவிய கும்மிடிபூண்டி காவல் துறைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.விஜயகுமார் கூறினார்.

கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் சக்திவேல், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலம், உதவி ஆய்வாளர் சந்திரசேகர், நகர செயலாளர் மு.க.சேகர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இமயம் மனோஜ், மற்றும் எம்.எஸ்.எஸ்.சரவணன், வேலு மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்