தற்போதைய செய்திகள்

ராசிபுரம் தொகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1030 கோடியில் திட்டம் – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தகவல்

நாமக்கல்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.1030 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்காவேரி மற்றும் வேலம்பாளையம் ஆகிய இடங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா பேசியதாவது:- 

முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளில் புறநோயாளிகள் சிகிச்சை, சிறுநோய்களுக்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, தற்காலிக குடும்பநல கட்டுப்பாட்டு முறைகள், பேறு கால முன் கவனிப்பு, பேறு கால பின் கவனிப்பு, குழந்தைகளுக்கான தடுப்பு ஊசி, மற்றும் ரணஜன்னி தடுப்பு ஊசி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு சிகிச்சை, குடும்பநலம் மற்றும் பால்வினை நோய் சிகிச்சை ஆகிய சேவைகள் வழங்கப்படும்.

மேலும் ஹிமோகுளோபின் பரிசோதனை, ரத்த சர்க்கரையின் அளவை கண்டறிதல், சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரதம் பரிசோதனை, சிறுதி மூலம் காப்பத்தை உறுதி செய்தல், மலேரியா ரத்த தடவல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். புறநோயாளிகள் தொடர்பாக அனைத்து சிகிச்சைகள், காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றிற்கான சிகிச்சைகள், சிறு காயங்களுக்கான முதலுதவி மற்றும் சிகிச்சைகள் பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை மற்றும் ரத்த சோகைக்கான சிகிச்சைகள் வயது முதிர்ந்தோருக்கான சிகிச்சைகள், வளரினம் பருவத்தினருக்கான சிகிச்சை முறைகள் மற்றும் ஆற்றுப்படுத்துதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். எனவே, பொது மக்கள் தங்கள் பகுதியில் அமையவுள்ள இந்த மினி கிளினிக்குகளில் வழங்கப்படும் சேவைகளை பயன்படுத்தி உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ராசிபுரம் போக்குவரத்து பயன்பாட்டிற்காக புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்டு வரும் வீடுகள் 1500 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. ராசிபுரம் நெடுங்குளம் கூட்டுகுடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்து ரூ.885 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தயாரிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் ஆய்வு செய்து உத்தரவிட்டதன் பேரில் மேலும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.1030 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பூர்த்தியடையும் நிலையில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும்.

மேலும் தமிழகத்தில் 29.50 லட்சம் நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒரு கோடியிற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளார்கள். மேலும் அப்பநாய்க்கன்பட்டியிலிருந்து தண்ணீர்பந்தல்காடு வரை ராசிபுரம் புறவழி தார்சாலை அமைக்க ரூ.29 கோடி நிதிஒதுக்கீடு செய்து விரைவில் அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதார நலப்பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன், வட்டார மருத்து அலுவலர் செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜா, வேம்புசேகர், வட்டாட்சியர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணன், கிருஷ்ணமூர்த்தி, சாந்தா, சாந்தகுமார், அரசு மருத்துவர்கள் செல்வராணி, மரு.சர்மிளா, சித்தா மருத்துவர் பாலாமணி, கிராம சுகாதார செவிலியர் வீரவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.