தற்போதைய செய்திகள்

அம்மா பேரவையில் உறுப்பினர்களை சேர்க்க எந்த வரையறையும் இல்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

புரட்சித்தலைவி அம்மா பேரவையில் உறுப்பினர்களை சேர்க்க எந்த வரையறையும் நிர்ணயிக்கப்படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அம்மா பேரவை உறுப்பினர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழக வளர்ச்சியில் புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட ஜெ பேரவையின் உறுப்பினர் சேர்க்கை தொடக்க விழா அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை அதிமுக நிர்வாகிகளிடம் வருவாய் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கழகத்தில் கிட்டதட்ட ஒன்றைரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர், அம்மா பேரவையில் உறுப்பினர்களை சேர்க்க வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. கொரோனா தொற்று காலக்கட்டத்திலும் தனிமனித இடைவெளியுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இது போன்ற நிகழ்ச்சிகள் கழகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

கழகத்தில் இணையும் இளைஞர்கள், மாணவ செல்வங்கள் முதல்வர், துணை முதல்வருக்கும் அரசுக்கும் வலுசேர்க்கும் வகையில் அரசின் சாதனைகளை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்.ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக எனும் பேரியக்கத்தில் ஏற்கனவே எம்ஜிஆர் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் இளம் பெண்கள் பாசறை, அம்மா பேரவை என இளைஞர்கள் பணியாற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், புதிதாக இளைஞர்களை கட்சியில் இணைத்து அவர்களுக்கும் அங்கீகாரம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இளைஞர்களை சேர்ப்பது தொடர்பாக இலக்கோ , எண்ணிக்கையோ வரையறுக்கப்படவில்லை.

நீட் தேர்வு விவகாரத்தை பொறுத்தவரை நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போதே முதல்வர் இபிஎஸ் தனது ஆணித்தரமான கருத்தை ஆவேசத்துடன் பதிவு செய்துள்ளார். முதல்வரும், அமைச்சரும் அளித்த ஆணித்தரமான விளக்கத்திற்கு பதிலளிக்க முடியாமல் எதிர்கட்சி தலைவர் வாய்மூடி மவுனியாக இருந்து விட்டு, தற்போது முப்பெரும் விழா என்ற பெயரில் அரங்கில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார். திமுக கபட நாடகம் ஆடுவதை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்று என்பது கட்டுக்குள் உள்ளது, உலகிலேயே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதே போன்று நாளொன்று 82 ஆயிரம் வரை அதிகமான பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமும் தமிழகம் தான், மார்ச் மாதம் கொரோனாவின் தாக்கம் என்பது அதிகப்படியாக இருந்த காலக்கட்டத்தில் உரிய நேரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து தமிழக அரசு மக்களை அரசு பாதுகாத்தது தற்போது கூட மக்கள் அச்சமடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணைசெயலாளர் கே.ஏ.கே.முகில், எம்.எல்.ஏ.சதன் பிரபாகரன், துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.