தற்போதைய செய்திகள்

நோய் பரவலை குறைக்க அரசு தொடர் நடவடிக்கை – முதலமைச்சர் பேட்டி

சென்னை

இந்தியாவிலேயே அதிக நிவாரணம் அளித்தது கழக அரசுதான் என்றும் எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புக்கு பதில் அறிக்கை தான் தருகிறார்கள் என்றும் நோய்ப்பரவலை குறைக்க அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற ரூபாய் 5,000 ஆயிரம் கொடுக்க வேண்டுமென்று…

பதில்: புயல், வெள்ள காலங்களில் அவர் எவ்வளவு தொகை கொடுத்தார். இறப்பிற்கு ரூபாய் 2 லட்சம் கொடுத்தார். நாங்கள் ரூபாய் 20 லட்சம் கொடுத்திருக்கிறோம். அரசாங்க நிதி நிலைக்கு ஏற்ப, தேவையான அளவிற்கு அரசு நிதி உதவி செய்து கொண்டிருக்கிறது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 கொடுத்துள்ளோம். விலையில்லா அரிசி ஜூலை மாதம் வரை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல், அம்மா உணவகத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 7 லட்சம் நபர்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறோம். மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா உணவகங்கள் மூலம் விலையில்லாமல் உணவளித்துக் கொண்டிருக்கிறோம். கழகத்தின் சார்பாக, அனைத்து மாவட்டங்களிலும், நிவாரணப் பொருட்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிகமாக நிவாரணம் கொடுத்த அரசு தமிழக அரசு தான். தற்பொழுது ஊரடங்கில் அதிகமான தளர்வுகள் கொடுக்கப்பட்டு, 100 சதவிகித தொழிலாளர்கள் பணிபுரியலாம். அதேபோல், வேளாண் பணிக்கு எந்தத்தடையும் கிடையாது. 100 நாள் வேலைத்திட்டத்திலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் பணிக்குச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் அத்தியாவசியப் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

கேள்வி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முழு ஒத்துழைப்பு தரவில்லையென்று அரசுத் தரப்பு குற்றம் சாட்டுவது குறித்து?

பதில்: என்ன ஒத்துழைப்பு தருகிறார்கள்? தினமும் அறிக்கைதான் கொடுக்கின்றார்கள். இது ஒரு புதிய நோய். இது எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. அனைவரும் சுயக்கட்டுப்பாடோடு இருந்தால்தான் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று ஆரம்பத்திலிருந்து நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. மருந்து கண்டு பிடிக்கப்பட்டிருந்தால் குணமடையச் செய்யலாம். இந்தியாவிலேயே, நாள்தோறும் அதிகமான பரிசோதனைகள் செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.

நேற்று கூட சுமார் 42 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம். வீடு, வீடாகச் சென்று நோய் அறிகுறி உள்ளதா என்பதைக் கண்காணிக்க சுமார் 30 ஆயிரம் நபர்களை நியமித்து அவர்களும் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளதா எனக் கேட்டு, அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தி சிகிச்சை அளிக்கின்றோம். இதனால் தான் சென்னையில் தற்பொழுது நோய்ப்பரவல் குறைந்து கொண்டிருக்கிறது.

இன்னும் 10 நாட்களில் நோய்ப் பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால் இதை நிச்சயமாக தடுக்க முடியாது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தான் இந்த நோய்ப்பரவலைத் தடுக்க முடியும்.

இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கியின் மூலம் விழப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் மக்கள் கடைபிடித்து வந்தால், நோய்ப் பரவலை எளிதாக தடுக்க முடியும். அதற்கு மக்களுடைய ஒத்துழைப்பும், எதிர்க்கட்சிகளுடைய ஒத்துழைப்பும், பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பும் மிக மிக முக்கியம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.