தற்போதைய செய்திகள்

ராமநாதபுரத்திற்கு 22-ந்தேதி முதலமைச்சர் வருகை சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட கழகம் ஏற்பாடு

ராமநாதபுரம்

ராமநாதபுரத்திற்கு 22-ந்தேதி முதலமைச்சர் வருகையையொட்டி சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட கழகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 22-ந்தேதி ராமநாதபுரத்திற்கு வருகை தரவுள்ளார். அப்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் ஆர்.தர்மர், ஆனிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதாவது:-

தமிழகத்தில் பொற்கால ஆட்சியை தந்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடியாரை வரவேற்க நாம் தயாராக வேண்டும்.ஏற்கனவே ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்தபோது நாம் அளித்த வரவேற்பை போல் இந்த முறையும் சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும். நமது மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தந்த மகானை நாம் போற்றும் வகையில் பொதுமக்களுடன் இணைந்து மரியாதை செய்ய வேண்டும்.

நமது மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசின் தீவிர முயற்சியினால் கொரோனா தொற்று நாளுக்குநாள் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது மாவட்டத்திற்கு சட்டக்கல்லூரி,கலாம் பெயரில் ஒரு கலைக்கல்லூரி தந்த நமது கழகத்திற்கும்,அரசுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறி இந்த முறை மாணவர்கள்,இளைஞர்கள் புடைசூழ பொதுமக்களோடு நாம் முதல்வரை வரவேற்க வேண்டும்.

இவ்வாறு ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.