தற்போதைய செய்திகள்

ஜோலார்பேட்டையில் ரூ.190 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.190 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் மத்திய அரசின் திட்டம் ஐல் ஐPவன் மிஷன் திட்டத்தில் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கும் வகையில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கும் நிகழ்வாக பழுதடைந்த உயர்மட்ட நீர் தேக்க தொட்டியை அகற்றி சுமார் 60 ஆயிரம் கொள்ளளவு உள்ள புதிய உயர்நிலை நீர் தேக்க தொட்டியை கட்டும் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ப.சிவன்அருள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது;-

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக புரட்சித்தலைவி அம்மாவின் அரசு செயலாற்றி வருகின்றது. ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு கட்டமைப்புகள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது, தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் மேல்நிலைப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டுள்ளது, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தரமான சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை போக்கிட காவேரி கூட்டு குடிநீர் திட்டம் இணைக்கப்பட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியால் மக்கள் குடிநீர் பிரச்சினையை சந்திக்கின்றனர். இதனை நிரந்தரமாக போக்கிட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கையை வைத்தோம்.

இந்த கோரிக்கையை ஏற்று ரூ.190 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கி கொடுத்துள்ளார். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் பயனடைவார்கள். இதுபோல புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் தொகுதியின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து அம்மாவின் அரசும் நாங்களும் பணியாற்றுவோம். இந்த திட்டத்தை வேகமாக முடித்து மக்கள் பயனடையும் வகையில் பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை மகேஷ்பாபு, செயற்பொறியாளர் ஆறுமுகம், கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர்கள் ஆர்.ரமேஷ், திருப்பதி, உறுப்பினர் சிவாஜி, உதவி இயக்குநர்கள் அருண், பிச்சையாண்டி, நேர்முக உதவியாளர் வளர்ச்சி ஹரிஹரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சங்கர் மற்றும் கலந்துக்கொண்டனர்.