தற்போதைய செய்திகள்

ஆவடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் திறப்பு – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

அம்பத்தூர்

ஆவடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூறி உள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் பகுதியில் மாஃபா பவுண்டேஷன் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட சலவைத்தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 

ஆவடி சட்டமன்ற தொகுதியில் விரைவில் சலவை தொழிலாளர்கள் குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இந்த தொகுதியில் கட்டப்பட்டுள்ள 9 மேம்பாலங்களில் இரண்டு மேம்பாலங்களும் முதல்வர் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். இதேபோன்று நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆவடி மீஞ்சூர் உள்வட்ட மேம்பால பணிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

மேலும் ஆவடியில் நடைபெறும் மேம்பால பணிகளான அண்ணனூர் மேம்பால பணி, எஸ்.ஏ.இன்ஜினியரிங் காலேஜ் தரைப்பாலம், திருவேற்காடு காடுவெட்டி இணைக்கும் பாலப்பணி, ஆகியவை பட்டாபிராம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை விரைவில் முதலமைச்சரால் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் ஆவடியில் பறக்கும் பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கருதுகிறேன் இன்று ஒரே தொகுதியில் 9 மேம்பாலங்கள் கொடுத்து தென்சென்னைக்கு ஒரு சிறுசேரி போல் பட்டாபிராம் பகுதியில் ஐடி பார்க் அனைத்தும் வரும் வகையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. ஆவடி சட்டமன்ற தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 9 எம்.எல்.டி ஆவடியில், 4 எம்.எல்.டி. மிட்டனமல்லியில் இயக்கத்தில் உள்ளன மேலும் ரூபாய் 115 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் முதன்முறையாக இந்த பகுதி பயன்பெறுகிறது.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாஃபா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் லதா பாண்டியராஜன், ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், கோலடி மகேந்திரன், ஆவடி மாநகராட்சி ஆணையாளர் நாராயணன், வட்ட கழக செயலாளர் ஜெபசெல்வன், கழக வழக்கறிஞர் டி.அறிவரசன், அம்மா கண்ணன், ஆர்.சி.டி.ஹேமந்த், ஆர்.சி.டி.கமல், வக்கீல் சுருளிராஜன் உள்ளிட்ட ஆவடி நகர நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.