தற்போதைய செய்திகள்

விளையாட்டுத்துறையில், பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு

விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களை கற்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி தடைபடாமல் தொடர்ந்து கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், புத்தகப் பை, நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்பாசியர்களுக்கு பணி வழங்கும் போதே அவர்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் என்று மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்பொழுது நடைபெற்ற நீட் தேர்வில் 90 சதவிகிதம் கேள்விகள் நமது பாடத்திட்டத்தின் மூலம் கேட்கப்பட்டுள்ளது. எத்தனை போட்டித்தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும். பாடத்திட்டம் குறைப்பு குறித்து ஒருமாதத்திற்கு முன்பே குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்ட நம்பியூர் பேரூராட்சி கல்லாகாட்டுப் பாளையத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள சாலை, பழனி கவுண்டர் வீதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கொன்னமடை சாலை, ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஈஸ்வரன் கோவில் செல்லும் சாலை, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் புதிய ஆவின் பாலகம் ஆகியவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்.

தொடர்ந்து, நம்பியூர் பேரூராட்சி, வி.ஐ.பி. நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் நம்பியூர் ஒன்றியக் கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கௌசல்யா ஈஸ்வரமூர்த்தி, நம்பியூர் பேரூராட்சி செயலாளர் கருப்பண்ண கவுண்டர், எலத்தூர் பேரூராட்சி செயலாளர் சேரன் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.