தற்போதைய செய்திகள்

உதயநிதிஸ்டாலினுக்கு கழகத்தினர் தக்க பதிலடி கொடுப்பார்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

சென்னை

பொது மேடைகளில் அநாகரிகமாகத் தொடர்ந்து பேசி வந்தால் உதயநிதிக்குக் கழகத்தினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிகாரிகளுடன் வருவாய், பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ந்து திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்கள், களப்பணியாளர்கள் 743 பேருக்கு சிறப்பாக பணிபுரிந்ததற்கு பாராட்டும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் கவுரவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

கொரோனா தொற்று வைரஸ் எதிராக மனித குலமே போராடிய அசாதாரண சூழ்நிலையில் தமிழக முதல்வர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று என்பது தற்போது கட்டுக்குள் உள்ளது. சென்னை மண்டலத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று அதிகரித்த காலகட்டத்தில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு மருத்துவர்கள் அலுவலர்களுடன் இணைந்து பணியாற்றிய காரணத்தினால் பாதிப்பு குறைந்துள்ளது.

இது 15 சதவீதத்திற்கும் கீழ் பாதுகாப்பான நிலையில்தான் தமிழகம் உள்ளது என மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இதுவரை 64 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 908 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக 4 லட்சத்து 75 ஆயிரத்து 713 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது நோய் தொற்று ஏற்படுவதைவிட குணமடைவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் தினந்தோறும் முதல்வர் ஆய்வு நடத்தி, அதனை மக்களிடம் எடுத்துரைத்து வருவதன் காரணமாக விழிப்புணர்வு ஏற்பட்டு, கொரோனா தொற்று என்பது தமிழகத்தில் தற்பொழுது வெகுவாக குறைந்து வருகிறது.வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான். வளர்ந்த நாடுகளில் கூட யாரும் இந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளவில்லை.

அதிமுக ஒரு ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம்.முதல்வரும்,துணை முதல்வரும் ஒரு சாமானிய தொண்டனாக இருந்து,அன்பால் அனைவரையும் அரவணைத்துவருகிறார்கள்.

தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற கழகம் அதிமுக கழகம் தான்.அதிமுகவில் கூட்டணி வலுவாக இருக்கிறது கூட்டணி கட்சி என்றாலும் அவரவர் கருத்தை சொல்லத்தான் செய்வார்கள்.அவரவர் விருப்பத்தைச் சொல்ல எந்த தடையும் கிடையாது.உதயநிதி ஸ்டாலின் பொதுவெளியில் நாகரீகம் கருதி பேச வேண்டும். உதயநிதிக்கு ஸ்டாலின் பயிற்சிக்கு அளிக்க வேண்டும்.

இப்படி பேசுவது உதயநிதியின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் நல்லது கிடையாது. தொடர்ந்து உதயநிதி பேசி வந்தால் அதிமுகவினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆகவே உதயநிதி பொது இடங்களில் அநாகரீகமாகப் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். தமிழகத்தில் இரண்டாம் தலைநகர் தொடர்பாக தொடர் வேண்டுகோள் வைத்து வருகிறோம்.

கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சி குறித்தே எதிராகவே கருத்து தெரிவிக்க கூடாது என 144 தடை விதிக்க முடியாது. கூட்டணி கட்சிகள் தங்கள் கருத்துக்களைக் கூறுவதற்கு உரிமை உள்ளது. முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளனர். எதிர்க்கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.