தற்போதைய செய்திகள்

பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடியில் அணைக்கட்டு மதகுகள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் தளவானூர் ஊராட்சியில் பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு மதகுகளை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் தளவானூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25.35 கோடி மதிப்பீட்டில் அணைக்கட்டு மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு விவசாய பயன்பாட்டிற்காக அணைக்கட்டு மதகுகளை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும் 3.1 மீட்டர் உயரமும் கொண்டது. இதன் இருபுறமும் பக்கத்திற்கு மூன்று மணற்போக்கிகள் வீதம் என ஆறு மணற்போக்கிகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 146215.00 கனஅடிநீர் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப் பெற்றுள்ள மணற்போக்கிகள் மூலம் வினாடிக்கு 5105.00 கனஅடிநீர் வெளியேற்றும் திறன் கொண்டது.

அணைக்கட்டு கட்டப்பட்டதின் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 87 எண்ணிக்கையிலான திறந்த வெளிக்கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும். இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் மலட்டாறு,வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும் மற்றும் நிலத்தடிநீர் மட்டம் உயரும்.

இந்த அணைக்கட்டின் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தளவானூர், கொங்கரக்கொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர் திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட எனதிரிமங்கலம், காவனூர், உளுத்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய கிராமங்கள் பயன்பெறும்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.