தற்போதைய செய்திகள்

அம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பெருமிதம்

சென்னை

ருசி மிகவும் அலாதியானதாக இருக்கிறது என்று அம்மா உணவகத்துக்கு தேசிய வங்கி தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் தலைவர் முனைவர் ஜி.ஆர்.சந்தாலா பல்வேறு துறை சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திற்கு வருகை புரிந்தார். அவரை கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு ஆட்சியை சிறப்பாக வழிநடத்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது என்றும், விவசாயிகள் தாங்கள் செலுத்த வேண்டிய கடன் நிலுவையை குறித்த காலத்தில் செலுத்தும் பட்சத்தில்,

தமிழக அரசே விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டியை மொத்தமாக ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்து, அதன் பின்னரே, சில மாநிலங்களில், தமிழகத்தைப் பின்பற்றி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயக் கடன் வழங்கும் வங்கிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வங்கிகளுக்கு இரண்டு சதவீதம் வட்டி மானியமும் தமிழ்நாடு அரசு வழங்குவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய வங்கியின் தலைவர் முனைவர் ஜி.ஆர்.சந்தாலா, தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து வெகுவாகப் பாராட்டியதுடன், அம்மா உணவகம் குறித்து பெருமிதம் கொண்டார். அவர் தான் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பல மாநிலங்களில் பணிபுரிந்ததாகவும், அவரது குடும்பம் சென்னையில் வசித்ததாகவும் தெரிவித்தார்.

அவர் ஒருமுறை பாண்டி பஜாரில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து, அங்கே சென்று தான் உணவருந்தியதாகவும், அதன் சுவை அலாதியாக இருந்தது மட்டுமின்றி, அம்மா உணவகத்தை சுத்தமாக பராமரித்து வருவதையும் வெகுவாகப் பாராட்டினார். அதுமட்டுமின்றி, அவர் பல மாநில மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்துள்ளதாகவும், எப்போதெல்லாம் வாய்ப்பு கிட்டுமோ அப்போதெல்லாம் அம்மா உணவகத்தின் பெருமையை அவர்களுக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாடு ஒரு முன்னேற்றமடைந்த மாநிலம் என்றும், தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் மிகச் சிறப்பானது என்றும், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதி மிகச் சிறப்பாக உள்ளது என்றும் பெருமிதம் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் தலைவர்ஆர்.இளங்கோவன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் எல்.சுப்பிரமணியன், தேசிய வங்கியின் சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்திசரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.