தற்போதைய செய்திகள்

தூத்துக்குடிக்கு 22 – ந்தேதி முதலமைச்சர் வருகை – முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் ஆய்வு கூட்டத்திற்கு 22.09.2020 பிற்பகல் வருகை தர உள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் ஆய்வு கூட்டம் நடைபெறும் அரங்கங்கள், திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் புகைப்படக்கண்காட்சி அரங்கு அமைக்கப்பட உள்ள இடங்களிலும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு 22.09.2020 அன்று பிற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

இந்தியாவிலேயே கொரோனா தொற்று காலத்தில் களப்பணிக்கு சென்று பணியாற்றும் ஒரே முதலமைச்சர் முதலமைச்சர் தான். ஒரு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் ஆய்வுக்கு வருவது இதுவே முதல்முறை. ஏனெனில் துறைவாரியாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள்தான் ஆய்வு செய்வார்கள். ஆனால் முதலமைச்சர் கொரோனா தொற்று காலத்திலும் உயிரை துச்சமென மதித்து களப்பணி ஆற்றி வருகிறார்.

கொரோனா தொற்று காலத்தில் கொரோனா தடுப்பு பணிகளோடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர்களோடு ஆய்வு செய்வது சிறந்த ஜனநாயக நடைமுறை மற்றும் முன்னுதாரணமாக உள்ளது.

முதலமைச்சர் வருகின்ற நேரத்தில் நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே நமது மாவட்டத்தில் கொரோனா தொற்று பரிசோதனைகள் அதிகரித்தபோதிலும் தொற்று கணிசமான அளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா தொற்றினால் இறப்பு வீதம் 0.67 சதவீதம் என்ற குறைவான அளவில் உள்ளது.

தமிழக முதன்மை செயலரும், சுகாதாரத்துறை செயலரும் நமது மாவட்டத்தினை கொரோனா தொற்று நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளதாக பாராட்டியுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 3 ஆர்டிபிசிஆர் கருவிகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.29 கோடி செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் நவீன கதிர்வீச்சு கருவி வழங்கப்பட்டுள்ளது. இக்கருவி மக்கள் பயன்பாட்டிற்கு வருகிற 22-ந்தேதி முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் வருகை வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். நமது மாவட்டத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக புரட்சித்தலைவி அம்மா அவர்களாலும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அதிக அளவில் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடிக்கு 4-வது பைப்லைன் திட்டத்தினை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்.

தொடர்ந்து அந்த திட்டத்தினைமுதலமைச்சர் நிறைவேற்றி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 22.11.2017 அன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மக்களுக்கு அர்ப்பணித்தார். கோவில்பட்டி 2வது பைப்லைன் திட்டத்தினை ரூ.100 கோடி செலவில் நிறைவேற்றி முதலமைச்சர் நேரடியாக வந்து திறந்து வைத்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிவிப்பின்படி, முதலமைச்சர் உடன்குடியில் மிகப்பெரிய அனல்மின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் நமது மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் ரூ.50,000 கோடி மதிப்பீட்டில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தினை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் நமது மாவட்டத்தில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகிறார்.

அடுத்தபடியாக கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திக்குளம், புதூர் ஆகிய 5 ஒன்றியங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் 248 குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டம் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவேறியுள்ளது. இந்த திட்டமும் விரைவில் முடிக்கப்பட்டு முதலமைச்சர் நேரில் வந்து மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்ற அளவுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

ஆய்வில், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, ஒன்றியக்குழு உறுப்பினர் கோபி(எ)அழகிரி, முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், திருப்பாற்கடல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.