தற்போதைய செய்திகள்

1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அரூரில்அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்

தருமபுரி

தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற விழாவில் ரூ.5.13 கோடி மதிப்பில் 1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்;. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி,தலைமை வகித்தார்.

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

இந்தியாவில் வேறு மாநிலங்களில் இல்லாத திட்டங்களை தமிழக அரசு மக்கள் நலன் கருதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்கள் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இல்லை.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்திற்கு உட்பட்ட காரப்பாடி மலை கிராமத்தில் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை தொடர்ந்து பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. ரூ.32 லட்சம் செலவில் தமிழக அரசு மின்சார வசதி இல்லாத காராப்பாடி மலைகிராமத்திற்கு தற்போது மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரப்பாடி மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு 48 பயனாளிகளுக்கு தலா 34 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்பில் கறவை மாடுகளை வழங்கியுள்ளது. சுமார் ரூ.16 லட்சத்து 51 ஆயிரத்து 200 மதிப்பில் இந்த கறவை மாடுகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் பழங்குடியின மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த 48 குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக ஒரு கோடியே 44 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ரூ.8 லட்சம் செலவில் அங்கு நிலவிவந்த குடிநீர் பிரச்சனையை தீர்க்கப்பட்டுள்ளது. காரப்பாடி கிராமம் வனப்பகுதியில் உள்ளதால், அங்கு சாலைஅமைக்க வனத்துறையின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித் தொகைகள் இப்பகுதியில் உள்ள தகுதியுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இன்று நடைபெறும் அரசு விழாவிலும் மலைக்கிராம மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு மாவட்டத்திலுள்ள குக்கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் அடிப்படை தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.