சிறப்பு செய்திகள்

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020 – முதலமைச்சர் வெளியிட்டார்

சென்னை

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பால் செப்டம்பர் 15 முதல் 19-ம்தேதி வரை காணொலிக் காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வரும் ‘CONNECT 2020’ மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 மற்றும் தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஆகியவற்றை வெளியிட்டார்.

தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. அரசுத் துறைகள் மக்களுக்கான அரசின் சேவைகளை இணைய வழியில் அளித்து வரும் நிலையில், அச்சேவைகள் மற்றும் அவை சார்ந்த தகவல் உட்கட்டமைப்புகளை இணையவழி ஊடுருவல் மற்றும் தாக்குதல்களிலிருந்து திறம்படப் பாதுகாத்திட, மாநிலத்திற்கான இணையப் பாதுகாப்பு கொள்கையை வரையறுப்பது இன்றியமையாததாகிறது. அதன்படி, தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இணையப் பாதுகாப்புக் கொள்கை 2020 ஐ முதலமைச்சர் நேற்று வெளியிட்டார். இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த பல்வேறு இனங்களில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதன்மூலம் உற்பத்தியைப் பெருக்கிடவும், மனித வளத்தை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசு உறுதி கொண்டுள்ளது. அதன்படி, அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்திட, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான பிளாக்செயின் எனப்படும் ‘நம்பிக்கை இணையத்’ தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத்துறைகள் பயன்படுத்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை 2020 ஐ முதலமைச்சர் நேற்று வெளியிட்டார். இதன் மூலம், அரசின் மின்னாளுமைக்காக நம்பிக்கை இணையக்கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கிடும்.

அதுபோலவே, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பல்வேறு வகையிலான தரவுகளை அவற்றின் வகை, செயல்பாடு மற்றும் பரவல் போன்ற வகைகளில் கூராய்ந்து, அதன்மூலம் அவை தொடர்பான எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, அதற்கான விரைவான தீர்வுகளையும் பரிந்துரை செய்யவல்லது. தற்சமயம், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் உலகளவில் மருத்துவ நோயறிதல், மருந்துப்பொருள் கண்டுபிடிப்புகள், சட்ட அமலாக்கம், ராணுவம், விண்வெளி, கல்வி, ஆளுமை, முதியோர் பராமரிப்பு போன்ற பல துறைகளில் மனித வாழ்க்கையோடு இணைந்து இயங்குகின்றது.

இத்தொழில்நுட்பத்தினை தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழி சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான உத்திகளை வழங்குவதற்காக தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை 2020 ஐ முதலமைச்சர் நேற்று வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.

இந்த நிகழ்ச்சியில், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச்செயலாளர் க.சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.விஜயகுமார், மின்னாளுமை ஆணையர் மற்றும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் சந்தோஷ் கே.மிஸ்ரா, மற்றும் சி-டாக் நிறுவன இயக்குநர் கமாண்டர் எல்.ஆர்.பிரகாஷ், சி.ஐ.ஐ.-தமிழ்நாடு பிரிவின் தலைவர் ஹரி தியாகராஜன், சி.ஐ.ஐ.-கனெக்ட் 2020 தலைவர் சுரேஷ் ராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.