தற்போதைய செய்திகள்

மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்குகிறது அம்மாவின் அரசு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்

கரூர்

மக்களுக்கு எண்ணற்றத் திட்டங்களை அம்மாவின் அரசு வாரி வழங்குகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதத்துடன் கூறினார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியூர், நெரூர் தென்பாகம், சோமூர் ஆகிய ஊராட்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் நேற்று ரூ.379.57 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டை இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக, வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல எண்ணிடலங்கா திட்டங்களை அறிவித்து செயல்படுத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கரூர் மாவட்ட மக்களின் நீண்ட நெடுங்கால கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றி தரும் அரசாக அம்மா அவர்களின் அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 50 ஆண்டுகால கோரிக்கையாக விளங்கிய பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் குகைவழி பாதைகள், கரூர் மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் இணைக்கும் நெரூர்-உன்னியூர் பாலம், 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் ரூ.490 கோடி மதிப்பில் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை,

கரூர் நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ரூ.21.12 கோடி மதிப்பில் அம்மா சாலை, விதிகளை தளர்த்தி புகளூரை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைத்தல், 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நீர் திறக்க ஏற்பாடு, தற்போது தரகம்பட்டியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க ஆணை, கிராமப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதிகள், சமுதாயக்கூடங்கள், தெருவிளக்குகள் என எண்ணிலடங்கா திட்டங்களை வழங்கி வருவது அம்மா அவர்களின் அரசு.

அந்த வகையில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட நன்னியூர், நெரூர் தென்பாகம், சோமூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.379.57 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப் பணிகளும் பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் எஸ்.கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் நா.முத்துக்குமார், கரூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எம்.எஸ்.மணி, கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குநர், ராதாகிருஷ்ணன், கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் தங்கராசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கிருத்திகா, கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள் நன்னியூர் சுதா, சோமூர் செந்தில்குமார், நெரூர் தென்பாகம் மணிகண்டன், நெரூர் வடபாக்கம் செந்தாமரைசெல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.