திருச்சி

இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் – திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு

திருச்சி

இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி கூறினார்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமை கழக அமைப்புச் செயலாளரும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி, புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசியதாவது:-

இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினராக சேர்வதற்கு குறைந்தது 10-ம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும் என்ற ஒரு விதியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி உருவாக்கி இருப்பதற்கு காரணம். இளைஞர் பாசறையில் உறுப்பினராக இணைகின்றவர்களுக்கு கழகத்தில் பொறுப்புகளும், பதவிகளும் மட்டும் வழங்காமல் எதிர்காலத்தில் அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பொருளாதார மேம்பாட்டை உருவாக்கித்தரவும் திட்டங்களை வகுத்துள்ளார்.

எனவே, இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக சேர்கின்றவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை என்பது மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்று காலத்திலும், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினைப் போல் மக்கள் நிலை பற்றி கவலைப்படாமல், உயிருக்கு பயந்து பதுங்கி ஒதுங்கி விடாமல், மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து, தன் உயிரைத் துச்சமென நினைத்து, பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல “மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு” என்று மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சுகாதாரப் பணிகளைப் முடுக்கிவிட்டு கொரோனா வைரஸ் தொற்றின் வேகத்தை குறைத்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

போர்க்களத்தில் எதிரிகளை தெறிக்க விடுகின்ற சிப்பாய்களாக, கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் விரைந்து களப்பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு புறநகர் மாவட்ட கழக செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசினார்.