தமிழகம்

கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் நவீன, மிகப்பெரிய மார்க்கெட் அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்ய நவீன, மிகப்பெரிய மார்க்கெட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

அம்மாவினுடைய அரசு விவசாயிகளின் அரசு. விவசாயிகள் எந்தெந்த விதங்களில் பாதிப்படைகின்றார்களோ, அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு, மற்ற தொழில் புரிபவர்களுக்கு சமமான நிலையை எட்ட வேண்டுமென்பது தான் அரசின் குறிக்கோள். அதற்காக அரசு படிப்படியான நிலைகளை உருவாக்கி, திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு முதன்மையானது நீர். எனவே, நீர் மேலாண்மைத் திட்டத்தைக் கொண்டு வருவதுதான் அரசினுடைய முதன்மையான திட்டம். அதற்கு குடிமராமத்துத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அது முழுக்க, முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் எந்த டெண்டரும் கிடையாது.

இத்திட்டத்திற்கு பொதுப்பணித் துறை மூலமாக சுமார் 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஊராட்சி ஒன்றிய ஏரிகளைப் பராமரிக்க சுமார் 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரணிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாத்து, நிலத்தடி நீரை உயரச் செய்து, வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீரையும், குடிப்பதற்குத் தேவையான நீரையும் உருவாக்கித் தருவதுதான் முதன்மையான திட்டம்.

இணையக்கல்புதூர், அரியாளம், பாரூர், கொடியாளம் போன்ற அணைக்கட்டுகளிலிருந்து வெள்ளக் காலங்களில் வெளியேறும் நீரை கால்வாய்களை வெட்டி ஏரிகளில் சேமித்தல், தடுப்பணை கட்டி நிலத்தடி நீரை உயர்த்துதல் போன்றவைதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 2 தலைமைப் பொறியாளர்கள், 3 கண்காணிப்புப் பொறியாளர்கள் என 5 பொறியாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், இரண்டாண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு பருவ காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை சேமித்து வைப்பதற்கு மேற்கொள்ள திட்டங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்கள். அதனடிப்படையில்தான் நாங்கள் நிறைய திட்டங்களை உருவாக்கி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகம் முழுவதும் குளிர்பதனக் கிடங்குகள் அமைத்துள்ளோம். மேலும், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் விளைகின்ற காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு அரசின் சார்பாக அனைத்து வசதிகளும் கொண்ட நவீன, மிகப்பெரிய காய்கறி, பழங்கள் மார்க்கெட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.