சிறப்பு செய்திகள்

சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு முன்னின்று உதவுகிறது அம்மா அரசு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம்

கோவை

சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு அம்மா அரசு முன்னின்றி உதவுகிறது என்று ஈழுவா, தீயா பேரமைப்பு சார்பில் நடைபெற்ற தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை ரோட்டில் உள்ள அருணாச்சலா மஹாலில் ஈழுவா மற்றும் தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக எஸ்.என்.டி.பி. ஈழுவா, தீயா தமிழ்நாடு பேரமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

முதலமைச்சர் நாடுபோற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். தினம் ஒரு திட்டம், நாள்தோறும் ஒரு உத்தரவு என மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் தேடி தேடி நிறைவேற்றப்பட்டு எளியவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு பகுதியில் வசிக்கும் ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதனை ஆய்வு செய்ததில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த செங்கோட்டை வட்டமும், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன.

அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களின் ஈழுவா, தீயா வகுப்பினரை சேர்ந்த சங்க நிர்வாகிகள் என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஈழுவா மற்றும் தீயா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் மூலம் மாநிலத்தின் இதர பகுதிகள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தான கோரிக்கையின் மீதும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அதன் பின்னர் இதனை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் 27.07.2020 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் வாழும் ‘ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையையும், ‘தீயா” வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையையும் தமிழ்நாடு ஈழுவா, தீயா சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அதனடிப்படையில் கடந்த 09.09.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதியில் வாழும் 25 நபர்களுக்கு ‘ஈழுவா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும், மதுக்கரை பகுதியில் வாழும் 3 நபர்களுக்கு ‘தீயா” வகுப்பினருக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அனைத்து வட்டங்களிலும் ‘ஈழுவா”, ‘தீயா” வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ‘ஈழுவா மற்றும் தீயா” வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முன்னுரிமை பெறுவதற்கு பெரும் உதவியாகவும் அவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் பயனுள்ளதாகவும் அமையும். தமிழகத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய மக்கள் அனைவருக்கும், முன்னின்று உதவும் அரசாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் அரசு திகழும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.