தற்போதைய செய்திகள்

ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் ரத்த தானம் ெசய்ய வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்

விருதுநகர்

உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ரத்ததானம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தி உள்ளார்.

சவுந்திரபாண்டியனாரின் 128-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சவுந்தரபாண்டியனார் ரத்ததான கழகம் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனை இணைந்து சிவகாசியில் மாபெரும் ரத்ததான முகாமை நடத்தின. நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். ரத்ததான முகாமை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்து ரத்ததானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

ரத்த தானம் செய்வதால் பலன் பெறுவது மற்றவர் மட்டுமல்ல, நாமும்தான். உடலில் இயற்கையாக புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். நான் ஒவ்வொரு அண்ணா பிறந்த நாளைக்கும் ரத்ததானம் செய்துள்ளேன். உடல் ஆரோக்கியமான ஒவ்வொரு மனிதனும் ரத்ததானம் செய்வது அவசியம்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.

நிகழ்ச்சியில் மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், சவுந்தரபாண்டியனார் ரத்ததான கழக நிறுவனர் செல்வகணேஷ், நகர கழக செயலாளர் அசன்பதுருதீன், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சின்னதம்பி, நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் எம்.கே.என்.செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.