திருவள்ளூர்

பொன்னேரி பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைவில் முடிவடையும் – சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. உறுதி

திருவள்ளூர்

பொன்னேரி பேரூராட்சியில் ரூ.54 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று பொதுமக்களிடம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் உறுதி அளித்தார்.

திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூ.54 கோடி திட்ட மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணியை துரிதப்படுத்துதல் சம்பந்தமாக ஆய்வுக்கூட்டம் பொன்னேரியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொன்னேரி பேரூராட்சி வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை மின்சார வாரியம் ஆகிய துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வியாபார சங்க நிர்வாகிகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்பொழுது பொதுமக்கள் பாதாள சாக்கடை திட்டம் எப்பொழுது நிறைவடையும் என்று கேள்வி எழுப்பினர். பொன்னேரி பேரூராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ரூ.54 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் வருகின்ற பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என்று பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பி.பலராமன் உறுதி அளித்தார்.

மேலும் தமிழக முதல்வரிடம் திட்டப்பணிகளுக்காக கூடுதலாக பத்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அதையும் கூடிய விரைவில் முதலமைச்சர் வழங்கி விடுவார் என்றும் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

மேலும் பொன்னேரி பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காத அளவிற்கு சாலை வசதிகள், மின் விளக்குகள் குடிநீர் என அனைத்து பணிகளையும் எப்பொழுது பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அனைத்துப் பணிகளையும் இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்குமாறு அதிகாரியிடம் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சித் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மின்துறை, உணவு பொருள் வழங்கும் துறை மற்றும் அனைத்து துறைத் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ. கேட்டுக் கொண்டார்.