தற்போதைய செய்திகள்

குத்தாலம் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டே தொடக்கம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

நாகப்பட்டினம்

ழுழுவீச்சில் பணிகள் நடைபெறுகிறது குத்தாலம் அரசு கலை அறிவியல் கல்லூரி இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான இடத்தினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்.பி.நாயர், சிறப்பு அலுவலர் (மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம்) இரா.லலிதா ஆகியோர் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் 11 மருத்துவக்கல்லூரிகளை ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு கொண்டு வந்து சாதனை படைத்திருக்கிறார். சேலத்தில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி கல்லூரியை அமைத்துக் கொடுத்திருக்கிறார். கிராமப்புற மாணவர்கள் இளங்கலை, முதுகலை கல்வியை பெற வேண்டும் என்பதற்காக, மாணவ, மாணவிகள் இருந்த இடத்திலேயே கல்வி கற்க ஏதுவாக தமிழகத்தில் பல்வேறு கல்லூரியை கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் குத்தாலம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் கல்லூரிப்படிப்பை படிக்க வேண்டும் என்றால் கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதை முதலமைச்சர் கருத்தில் கொண்டு தற்போது குத்தாலம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்திருக்கிறார். அதற்கான இடத்தை தற்போது தேர்ந்தெடுத்திருக்கிறோம். குத்தாலம் வட்டம் தேரழந்தூரில் இக்கல்லூரி அமைக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டே இக்கல்லூரி தொடங்கப்படும்.

கல்லூரி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதற்காக கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி முதல்வரை பொறுப்பு முதல்வராக நியமித்துள்ளார். இக்கலைக்கல்லூரியில் தற்போது பி.ஏ தமிழ் இலக்கியம், பி.ஏ ஆங்கிலம் இலக்கியம், பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல், பி.காம் ஆகிய ஐந்து முக்கிய பாடப்பிரிவுகளுடன் செயல்படும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

இந்த ஆய்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ், பி.வி.பாரதி, வி.ராதாகிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தங்க.கதிரவன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி, தஞ்சாவூர் மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் உஷா, கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.