தற்போதைய செய்திகள்

ரூ.118.75 லட்சம் மதிப்பில், 925 குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு – அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார்.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோ தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு மக்கள் நல திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். மேலும் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் மக்கள் நலத் திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் எந்தவித தொய்வும் ஏற்படக்கூடாது என்பதற்காக மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக எந்த தொய்வும் காலதாமதமுமின்றி தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ரூ.118.75 லட்சம் மதிப்பீட்டில், 925 குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த 12 குக்கிராமங்கள் பயன்பெறுகின்ற வகையில் ரூ.399.51 லட்சம் மதிப்பீட்டில் 2564 குடும்பங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கு கட்டமைப்புகள் உருவாக்கி இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் புண்ணியகோட்டி, செயற்பொறியாளர் குமார், ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம், ஒன்றியக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், பெருகவாழ்ந்தான் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்பாபு, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.