தற்போதைய செய்திகள்

20 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம் சுண்டக்காமுத்தூரில் நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்களை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும், வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைவில் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக இன்று 20 நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை விரைவாக கட்டுப்படுத்த முடியும்.

இந்த நடமாடும் பரிசோதனை வாகனத்தில் ஆய்வு பரிசோதனை மேற்கொள்பவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பணி மேற்கொள்வார்கள். மேலும் இவ்வாகனத்தில் மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 10,810 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 11,63,212 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாநகரப் பகுதிகளை 5 மண்டலங்களாகவும், ஊரகப்பகுதிகளை 5 மண்டலங்களாகவும் பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 5 அலுவலர்களும், துணை ஆட்சியர் நிலையில் 5 அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து வருதல், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை வீடுகளில் விடுதல் ஆகிய பணிகள் 108 அவசரகால ஊர்திகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
முதலமைச்சர் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக, உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 118 புதிய ஊர்திகளின் சேவையை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 41 அவசரகால ஊர்திகள் கொரோனா சிகிச்சைக்காக இயங்கி வரும் நிலையில் மேலும் 12 அவசரகால ஊர்திகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதை சேர்த்து மொத்தம் 53 அவசரகால ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.

அதிநவீன 108 அவசரகால ஊர்தியில் 2 பெரிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள், உயிர்காக்கும் மருந்துகள், பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் மற்றும் அனைத்து அதிநவீன மருத்துவ வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனையாக இந்த வாகனங்களில் வசதிகள் உள்ளன.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9,386 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 782 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது 730 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பொதுமக்கள் அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும்.
முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சோப் போட்டு கழுவுதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற செயல்களின் மூலம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.