தற்போதைய செய்திகள்

தருமபுரி ஆவின் நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட ரூ.2.70 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரியில் ஆவின் நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட ரூ.2.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் சென்னம்பட்டியில் நடைபெற்ற விழாவில் கொண்டையம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில் தேசிய பால் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2000 லிட்டர் பால் குளிர்விக்கும் திறன் கொண்ட தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, தலைமை வகித்தார். அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி-கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் ஒரே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் இருந்து வந்தது. தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக நிர்வாக வசதியை ஏற்படுத்தி, நிர்வாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.2.70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த புதிய நிர்வாக கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 261 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 17 பால் குளிர்விக்கும் மையங்கள் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த குளிர்விப்பு மையங்களில் இருந்து தலைமை இடத்துக்கு பால் அனுப்பப் படுவதை தவிர்த்து, நேரடியாக சென்னைக்கு பால் அனுப்பும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தற்போது அரசின் திட்டங்களால் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய கால்நடை கிளை நிலையங்கள், மருந்தகங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய கால்நடை மருத்துவர்களும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் கே.வெங்கடாசலம், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் கே.ஆதிமுலம், துணைப்பதிவாளர் (பாலவளம்) எஸ்.கே.விஜயலட்சுமி, நோடல் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தனபால், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மகாலிங்கம், பெரியண்ணன், பழனிசாமி, செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.