திண்டுக்கல்

மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி: அமைச்சரின் உறவினர் மீது புகார்

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே தனது நிலத்தை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உறவினர் அபகரிக்க முயற்சி செய்வதாக எஸ்.பி.யிடம் மூதாட்டி ஒருவர் புகார் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி எமக்கலாபுரம் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 65). இவர் தனது மகனுடன் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார்.

இது பற்றி மூதாட்டி லட்சுமி கூறியதாவது:-

நானும் எனது மகனும் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் எமக்கலாபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ் எங்களது நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு 20 அடியாட்களுடனும், ஜேசிபியுடனும் வந்தார். அவர் எங்களை வீட்டை காலி செய்யுமாறு கூறினர். வீட்டை காலி செய்யவில்லை என்றால் அடித்து உதைப்போம் என்று கூறி எங்களை மிரட்டினார். மேலும், வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்து விட்டார்.

தி.மு.க பிரமுகர் சுரேஷ் நான் அமைச்சர் ஐ.பெரியசாமியின் அண்ணன் மருமகன். நீ எங்கு சென்று புகார் அளித்தாலும் புகாரை வாங்க மாட்டார்கள். ஆகவே, உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டினார்.

ஆகவே, எங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனவே ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் தி.மு.க பிரமுகர் சுரேஷ் மற்றும் அவரது அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.