சிறப்பு செய்திகள்

செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்

சென்னை

திருச்சி மாவட்டத்தில் முன்னோட்ட அடிப்படையில் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொது விநியோக திட்டத்தின் கீழ், முன்னோட்ட அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த அரிசி வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக தலைமை செயலகத்தில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆறு குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசிப் பைகளை வழங்கினார்.

செறிவூட்டப்பட்ட அரிசியானது இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற நுண்ணூட்ட சத்துக்களை கொண்ட ஊட்டச்சத்து மிகுந்த அரிசியாகும். இது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், இரத்த சோகையைப் போக்கிடவும் உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14,500 மெட்ரிக் டன்னும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மற்றும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் 500 மெட்ரிக் டன்னும் 1.10.2020 முதல் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் மூன்றாண்டு காலங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அமைச்சர்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எம். சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.