தற்போதைய செய்திகள்

திமுக தான் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

தமிழக விவசாயிகளின் முதுகில் குத்திய கட்சி திமுக தான், எனவே விவசாயிகளுக்கு துரோகமிழைத்த திமுக தான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பட்டினப்பாக்கத்தில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ரூ 36 லட்சம் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மையத்தை மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஜெயகுமார் தமிழ்நாட்டில் காவல்துறை சுதந்திரமான அமைப்பாக இருக்கிறது. அரசியல் தலையீடு இல்லாத அமைப்பாக இருக்கிறது. இங்கே முன்னாள் டிஜிபி நடராஜ் இருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் இருந்தே தமிழக காவல்துறை விருப்பு, வெறுப்பு இல்லாமல் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

தவறு செய்தவர்கள் எப்படிப்பட்ட கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் இருந்து யாராக இருந்தாலும் தப்ப முடியாது. தன் கடமையை செய்ய அதிமுக அரசு என்றைக்கும் தயங்கியது கிடையாது.
மத்திய அரசு மசோதாக்கள் விவகாரத்தில் முதல்வர் அறிக்கையை தெளிவாக முழுமையாக படித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் மசோதாக்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக அவர்களது வாழ்வு மேம்படும் என்று முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். முதல்வரின் கருத்து தான் கட்சியின் கருத்து. இதில் அதிமுக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. இதில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்சி, திமுகவும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் தான்.

இன்றைய தலைமுறை மறந்து விட்டதாக ஸ்டாலின் நினைக்கிறார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் முதுகில் குத்திய கட்சி திமுக தான். ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் போது அமைதி காத்தது யார்.காவிரி நீருக்கான தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்காமல் 17 ஆண்டுகளாக வளம் கொழிக்கும் இலாகாக்களை பெற்று தன்னுடைய குடும்பத்தை தான் கொழிக்க வைத்தவர்கள் யார். முக்கியமான நீர் பாசன இலாகாவை ஏன் வாங்கவில்லை.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான சட்டம் இயற்றியது நமது முதல்வர்.

உலக வர்த்தக அமைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் தானே. அதனால் தானே சிறு வணிகத்திற்கு ஆபத்து ஏற்பட்டது.அவர் விஷ விதை தானே விருட்சமாக வளர்ந்தது. காவிரி பிரச்னையில் குழி தோண்டி புதைத்தது திமுக.

தமிழக விவசாயிகள் காவிரி பிரச்னைக்காக உச்சநீதிமன்றத்திற்கு வழக்கு தொடர சென்ற போது தடுத்து நிறுத்தியவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றைய பிரதமர் இந்திராகாந்தி மிரட்டியதால் கச்சத்தீவு பிரச்னையிலும் காவிரி விவகாரத்திலும் கருணாநிதி வாய் திறக்கவில்லை. காவிரி பிரச்னையில் துரோகம் செய்த கருப்பு ஆட்சி திமுக ஆட்சி. அவர்கள் ஆண்ட காலங்கள் தமிழகத்தின் கருப்பு ஆண்டுகள். எனவே நாங்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.