சிறப்பு செய்திகள்

3501 அம்மா நகரும் நியாயவிலைக்கடைகள் – முதலமைச்சர் துவக்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கொண்டு சென்று விநியோகிக்கும் வகையில் ரூ 9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 24.2.2014 அன்று சென்னையில் நகரும் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மக்கள் எளிதில் அணுக இயலாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தற்போது 48 நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் 277 கிராமங்கள் மற்றும் சென்னையில் 54 தெருக்களில் வசிக்கும் 27,420 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, நாமக்கல், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மலை கிராமங்கள் பயன் பெறுகின்றன.

இந்த திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தும் வகையில், முதலமைச்சர் 20.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் ரூபாய் 9.66 கோடி மதிப்பீட்டில் துவக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களைச் சேர்ந்த 5,37,315 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட ரூ 9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளின் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் நியாயவிலைக் கடைகள் மூலம், மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியான, அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், தாய் கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார்.

இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், அமைச்சர்கள், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.