தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு ரூ.4321 கோடி நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும் – ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்திற்கு ரூ.4321 கோடி நிலுவை தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

2017-2018-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவைத் தொகையினை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். இதில் முதன்மைச் செயலாளரும், வணிகவரி ஆணையரமான எம்.ஏ.சித்திக், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2017-2018-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி நிலுவைத் தொகை மத்திய அரசால் மாநிலங்களுக்கு இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவைத் தொகையில் தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டிய ரூ.4321 கோடியினை விரைவாக வழங்க வேண்டும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

37-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, 2017-2018-ம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரித் தொகையினை பகிர்ந்தளிப்பது தொடர்பான பரிந்துரை வழங்க அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த 18.1.2020 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இக்குழுவின் கூட்டம் பீகார் துணைமுதலமைச்சர் சுசில்குமார் மோடி தலைமையில் நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இக்குழுவின் உறுப்பினரான மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4321 கோடியினை விரைவாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், 2017-2018-ஆம் ஆண்டிற்கு மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பெற வேண்டிய நிலுவையாக உள்ள ஐஜிஎஸ்டி தொகையினை எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு விரைந்து முடிவெடுத்து 2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு சேரவேண்டிய ரூ.4321 கோடி தொகையை அளிக்க வேண்டும் என்று மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தினார். இந்நேர்வில், இக்குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டத்தில் விவாதித்து, தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை விரைவாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.