தற்போதைய செய்திகள்

கோவைநொய்யல் ஆற்றில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

கோவை

கோவை மாவட்டத்தில் பெய்துவரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகிறது. இதையடுத்து மாதம்பட்டியில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைத்ததன் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர் மழையினால் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சித்திரை சாவடி தடுப்பணை, குனியமுத்தூர் தடுப்புணை, சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை, உள்ளிட்ட தடுப்பணைகளில் மழை வெள்ளம் வேகமாக பாய்ந்து வருகிறது. மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை மாதம்பட்டி அருகே நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்வதை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது நொய்யல் வழித்தடத்தில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், ஏரிகள் நிலை குறித்தும், அனைத்து நீர்நிலைகளும் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மழைப் பொழிவின் அளவையும், நிவாரணப் பணிகள் குறித்தும், எந்தந்த குளங்கள் நிரம்பி உள்ளது என்றும் நீர் வழித்தடங்களை புனரமைப்பது குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.