தமிழகம்

அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது -முதலமைச்சர் தகவல்

சென்னை

அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசு அறிவித்த ஆலோசனைகளை ஏற்று சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தால், இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பல நடவடிக்கைகளை எடுத்தோம். ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம்.

இதன்மூலம் நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டது. அதனால்தான் இன்றைக்கு கொரோனா தொற்றுப் பரவல் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் குறைவாக இருக்கிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய்த் தொற்று எவ்வாறு பரவுகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கொடிய நோய் இது.

இந்நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் கூறுகின்ற ஆலோசனைகளின்படி அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு ஆலோசனைகளை வழங்கியதன் மூலமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அதற்கேற்றவாறு செயல்பட்டதன் விளைவாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது. இன்னும் குறுகிய காலத்தில், இந்த எண்ணிக்கைகளை குறைத்து, இந்நோய் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, தமிழ்நாடு முழுவதும் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறது.

இந்திய அளவில், மற்ற மாநிலங்களில் இந்நோய்ப் பரவல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தான் இந்நோய்ப் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது. ஆர்டிபிசிஆர் சோதனை மூலம்தான் இந்த நோயை துல்லியமாக கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிய ஆலோசனையின்படி, ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் அதிகமான எண்ணிக்கையில், அதாவது நாள் ஒன்றுக்கு 85,000 பரிசோதனைகள் எடுக்கிறோம். தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, தமிழ்நாட்டில்தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது.

அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுக்கப்பட்டு, குறையத் தொடங்கியுள்ளது. குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்புவோம் என்று நம்புகிறோம். வேளாண் பெருமக்களுக்கும், சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் 100 சதவிகித தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தொழில் புரிபவர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் 100 சதவிகித தொழிலாளர்களை வைத்துப் பணிபுரிய அம்மாவின் அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

அதேபோல, எந்த ஆண்டும் இல்லாத அளவில் அதிகமான நெல் விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்துள்ளது. இதற்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம். வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கின்ற விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்த காரணத்தால் அதிக விளைச்சல் பெறப்பட்டுள்ளது.

இதற்கு வேளாண் துறை அதிகாரிகளை பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். தொழில் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பொதுப்பணித் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் அனைத்துத் துறைகளிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும், அதிக வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.