தற்போதைய செய்திகள்

வீட்டுமனை பட்டா கோரியவர்களுக்கு அடுக்குமாடி வீடு வழங்க நடவடிக்கை – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

வீட்டுமனை பட்டா கோரியவர்களுக்கு அடுக்குமாடி வீடும் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.3.17 கோடி மதிப்பில் 1323 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முழுமையாக நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வீட்டுமனை இல்லாமல் பொதுமக்கள் யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அரசு வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வருகிறது. ஆன்லைன் மூலம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய அட்டைகளை வழங்கி வருகிறது. வேளாண் துறை, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்திலும் தடையில்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. பென்னாகரம் நகர பகுதியில் வீட்டு மனைப்பட்டா கோரிய அனைவருக்கும் வழங்கிட அரசுக்கு சொந்தமான இடமில்லாத போது, அதற்கு மாற்று வழியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகளை வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வீட்டு மனை பட்டா கோரியவர்களுக்கு பட்டாவுடன் அடுக்குமாடி வீடும் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.