தற்போதைய செய்திகள்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள்

கரூர்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சித்த மருந்துப்பொருட்கள் அடங்கிய மலிவு விலை மருந்து பெட்டகங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் வழங்கி விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமார் 5 டன் எடையுள்ள கபசுரக்குடி நீர் சூரணப்பொடிகள் தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு சித்த மருத்துவ அலுவலர்களின் முன்னிலையில் முறையாக காய்ச்சப்பட்டு வீடு, வீடுவீடாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, நான்கு முறை கரூர் மாவட்டத்தின் நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆற்றல் கொண்ட 15 வகையான மூலிகைகள் அடங்கிய கபசுரக் குடிநீருக்கான சூரணப்பொடி 500 கிலோ ரூ.4.76 லட்சம் மதிப்பிலும், ஆடாதோடை மணப்பாகு 1000 லிட்டர் ரூ.2.05 லட்சம் மதிப்பிலும், தாளிசாதி சூரணம் 1 லட்சம் மாத்திரை ரூ.3.43 லட்சம் மதிப்பிலும், அமுக்கரா சூரணம் 1லட்சம் மாத்திரை ரூ.1.13 லட்சம் மதிப்பிலும் மொத்தமாக ரூ.11.37 லட்சம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த மருந்துபொருட்களை 5 நபர் கொண்ட ஒரு குடும்பம் 5 நாட்களுக்கு உட்கொள்ளும் வகையில் 50 கிராம் கபசுரக் குடிநீருக்கான சூரணப்பொடி, 100.மி.லி. ஆடாதோடை மணப்பாகு, 50 அமுக்கரா சூரணம் மாத்திரைகள், 50 தாளிசாதி மாத்திரைகள் என தனித்தனி மருந்து பெட்டகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.150 ஆகும். ஆனால் பொதுமக்களின் நலன் கருதி ரூ.100க்கு இந்த மலிவுவிலை மருந்து பெட்டகம் விற்கப்படவுள்ளது.

தற்போது முதற்கட்டமாக கரூர் பேருந்து நிலையத்தில் இந்த மலிவுவிலை மருந்துபெட்டகம் விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைக்கேற்ப மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் உள்ள பேருந்து நிலையங்கள், அம்மா மருந்தகங்கள், அம்மா உணவகங்களில் இந்த மலிவு விலை மருந்து பெட்டகம் விற்பனை நிலையங்கள் விரிவு படுத்தப்படும். கொரோனா தொற்றை ஒழிப்பதில் முதலமைச்சர் தலைமையிலான அரசு விரைந்து செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்கும் வகையில் விரைவில் கொரோனா தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.