தற்போதைய செய்திகள்

கொரோனா தொற்று பரவலை தடுக்க கரூரில் வீடுவீடாக கபசுர குடிநீர் வழங்கும் பணி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

கரூர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்ட கபசுரக் குடிநீரை வீடுவீடாக வழங்கும் பணியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வ நகர் பகுதியில் துவக்கி வைத்தார்.

ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி செல்வநகர் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்றுபரவலை தடுப்பதற்காக வீடு, வீடாகச்சென்று கபசுரக்குடிநீரை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:- 

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்ட, நம் முன்னோர்களால் வழிவழியாக கடைபிடிக்கப்பட்ட சித்தமருத்துவ முறைப்படி, 15 வகையான மூலிகைகளின் கலவையாக உருவாக்கப்பட்ட கபசுரக் குடிநீரை பொதுமக்களின் வீட்டிற்கே சென்று களப்பணியாளர்கள் மூலம் வழங்கும் திட்டம் 11.06.2020 அன்று துவக்கப்பட்டுள்ளது.

இதற்கென்று தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருத்துவக் கழகத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதல் கட்டமாக 1000 கிலோ, இரண்டாம் கட்டமாக 2000 கிலோ, மூன்றாம் கட்டமாக 2500 கிலோ என மொத்தம் 5500 கிலோ ரூபாய் 42 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பில் கபசுர குடிநீர் சூரண பொடிகள் வாங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சூரணமாக வழங்காமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சித்த மருத்துவர்களின் முன்னிலையில் சூரணங்கள் கபசுர குடிநீராக காய்ச்சப்பட்டு களப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் மூலம் பொதுமக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக கரூர் நகராட்சி குளித்தலை நகராட்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கு 11.07.2020 அன்று தொடங்கி தொடர்ந்து 5 நாட்களுக்கு கபசுரக் குடிநீர் சித்த மருத்துவ அலுவலர்களின் அறிவுரையின்படி வழங்கப்பட்டது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 75,000 குடியிருப்புகளில் வசிக்கும் 3 லட்சம் நபர்களுக்கும், குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 30,580 நபர்களுக்கு 1765 கிலோ கபசுரண பொடிகளை குடிநீராக காய்ச்சப்பட்டு தொடர்ந்து 5 நாட்களுக்கு வீடுவீடாக வழங்கப்பட்டது. அதே போல் நேற்று முதல் 157 ஊராட்சிகளில் வசிக்கும் 2.90 லட்சம் மக்களுக்கு 900 கிலோ கபசுர சூரண பொடிகளும், 11 பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 1.72 லட்சம் மக்களுக்கு 520 கிலோ கபசுர சூரண பொடிகளும் ஒதுக்கீடு செய்து அதை குடிநீராக காய்ச்சப்பட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதேபோல் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு தலா 50 கிலோ வீதம் 400 கிலோ கபசுர சூரண பொடிகள் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் ஜமாத் மற்றும் தன்னார்வலர் மூலம் கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து கட்டாயம் முககவசம் அணிந்து அரசு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக், சித்தமருத்துவர் சுரேஷ், மண்மங்கலம் வட்டாட்சியர் கண்ணன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் குருசாமி, மல்லிகா, கிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.