தற்போதைய செய்திகள்

ஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறது – கழக அரசு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திருவில்லிபுத்தூர்

ஏழை-எளிய மக்களின் மனநிலை அறிந்து கழக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் காமராஜ் முனனிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

திருவில்லிபுத்தூர் மக்களின் நீண்ட நாள் கனவை எடப்பாடியார் அரசு நிறைவேற்றியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடியார் ஒருமுறை சொன்னால் அது நூறுமுறை சொன்னது போன்றது ஆகும். திருவில்லிபுத்தூரில் அரசு கல்லூரி வேண்டும் என்று சந்திரபிரபா எம்.எல்.ஏ. தொடர்ந்து சட்ட மன்றத்தில் வலியுறுத்தி வந்துள்ளார். நானும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.

அதன்விளைவாக இன்று அரசு கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி செல்வம் அழியா செல்வம். கல்வி செல்வத்தை கொடுப்பதில் எடப்பாடியார் அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. சிவகாசி அரசு கல்லூரியில் 18 பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. தென் மாவட்ட மக்கள் மீது தமிழக முதல்வர் எடப்பாடியார் மிகப்பெரிய பாசம் வைத்துள்ளார்.

தனியார் கல்லூரியில் ஏழை எளிய மாணவர்கள் அதிகமான கட்டணம் செலுத்தி படிக்க முடியாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த அரசு கல்லூரியில் ஆண்டிற்கு ரூ.1500 கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும. சொன்னதை செய்யக்கூடிய ஒரே ஆட்சி அதிமுக ஆட்சியாகும். திருவில்லிபுத்தூரில் அரசு கல்லூரி கொண்டு வந்தமைக்காக தமிழக அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வால்போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடியார் கண் அசைத்தால் திட்டங்கள் சட்டங்களாகும். ஏழை எளிய மக்களின் மனநிலை அறிந்து எடப்பாடியார் அரசு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகளின் உயர்கல்விக்கு எடப்பாடியார் அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

நிகழ்ச்சியில் அரசு கல்லூரி முதல்வர் காமராஜ், வத்ராயிருப்புப் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சிந்துமுருகன், கழக ஒன்றிய செயலாளர்கள் மயில்சாமி , முத்தையா, மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், வத்ராயிருப்புப் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் சேதுராமன், சுப்புராஜ், சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருவில்லிபுத்தூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வக்கீல் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.