தற்போதைய செய்திகள்

இலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம் – அமைச்சர் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்

இலவச மின் இணைப்பு பெற விவசாயிகள் அக்டோபர் 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில், நடைபெற்றது. இதில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழகச் செயலாளரும், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான மருத்துவர் வி.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு, மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடை, முககவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இருப்பு குறித்தும், நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கை குறித்தும் அமைச்சர்கள் ஆகியோர் கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தினந்தோறும் 100-க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் பாதிப்படைந்து வந்தாலும், மாவட்டத்தில் 1600-க்கும் மேல் போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. தற்போது 450 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கொரோனா பாதிப்பு பகுதிகளை சிறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்கு தொழில்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், இலவச விவசாய மின் இணைப்பு பெற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். 25 ஆயிரம் நபர்களுக்கு தட்கல் முறையில் மின் இணைப்பு கொடுக்கப்படும். ஏற்கனவே பதிவு செய்து வரிசையில் உள்ளவர் களுக்கு 25 ஆயிரம் இணைப்புகள் என இந்தாண்டுக்குள் 50 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படும்.

தட்கல் முறையில் ஆண்டுக்கு 10 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவந்த நிலையில், இந்தாண்டு முதலமைச்சர் உத்தரவின் படி 25 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படும். இதனால் கூடுதல் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் மற்றும் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு 75 ஆயிரம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்திற்கு 115 நடமாடும் நியாய விலை கடைகள் நாளை முதல் இயங்க உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பிரதமரின் கிஷான் சம்மான் நிதி முறைகேட்டில் இதுவரை ரூ.47 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதாவது 62 சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. சக்தி கணேசன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தா அருள்மொழி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.