தற்போதைய செய்திகள்

பேரிடர் காலங்களில் மக்களை மீட்க தயார்நிலையில் மண்டலக் குழுக்கள் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

பேரிடர் காலங்களில் மக்களை மீட்க மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை பேரிடர் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் ஒத்திகை முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு என்று ஏறத்தாழ 60 சதவீதத்திற்கும் மேலே குடிநீர் தேவை, விவசாயத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்ற வடகிழக்கு பருவமழையை இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் எதிர்கொள்ள உள்ளோம்.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து கிடைக்கக்கூடிய தொடர் மழை, கனமழை காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி அது புயலாக வந்தாலும் அல்லது பெரும் மழையாக வந்தாலும் அதை எதிர்கொண்டு மக்களுக்கு சேதாரம் இன்றி நீரை பாதுகாக்கின்ற நடவடிக்கையை புரட்சித்தலைவி அம்மாவின் அரசை வழிநடத்தி வருகின்ற விவசாயிகளின் பாதுகாவலர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்து வருகிறார். கொரோனா தொற்று காலத்தில் தமிழக மக்களை பாதுகாக்க அரண் அமைத்து தீர்க்கதரிசனமாக முதலமைச்சர் எடுத்துவரும் நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

பேரிடர் காலத்தில் ஒருவருக்குக்கூட இழப்பு ஏற்படக்கூடாது என செயல்படுகிறது அம்மாவின் வழியில் வந்த தமிழக அரசு. ஒக்கி புயல் வந்தது, வர்தா புயல், தனே புயல் என ஒவ்வொரு ஆண்டும் புயல் வந்து கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கஜா புயலின் போது முதலமைச்சருடன் நாங்களும் இரவு முழுவதும் கண்விழித்து மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.

இதில் தீயணைப்புத்துறைக்கு பெரும் பங்கு உண்டு. புயலின்போது உரிய நேரத்தில் காவல்துறையும், வருவாய்த்துறையும், தீயணைப்புத்துறையும், உள்ளாட்சித்துறையும் மக்களை பாதுகாப்பாக நிவாரண முகாமில் தங்கவைத்து, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, உணவு ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த காரணத்தினால் இப்பணியை பற்றி உலகம் முழுவதும் பேசப்படுகிறது.

முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி காட்சியின் மூலமாக வடகிழக்கு பருவமழை வருகின்றபோது எடுக்கப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும், சுகாதாரத்துறையின் மூலம் இக்காலத்தில் வரக்கூடிய நோய்த்தொற்றை தடுப்பது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. பாதிக்கப்படும் பகுதிகள் எத்தனை உள்ளன என்பது பற்றிய விபரம் நம்மிடம் உள்ளது. முதல் நிலையில் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதோடு மண்டலக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் நாம் விழிப்போடு கவனமாக இருக்கிறோம். புயல் மற்றும் கனமழையின் போது மக்களை பாதுகாப்பாக தங்கவைக்க நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த முறை 100 நிவாரண முகாம்கள் இருந்தன. தற்போது கொரோனா காலமாக இருப்பதால் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியிருப்பதால் 200 நிவாரண முகாம்களை உருவாக்க வேண்டும். பேரிடர் காலத்தில் முதலில் வருபவர்கள் பேரிடர் மீட்புக்குழு மற்றும் தீயணைப்புத்துறையினர். இந்த ஒத்திகை மக்களை, மக்களின் உடமைகளை, மக்களின் உயிரை, கால்நடைகளை காக்கின்ற ஒத்திகை, இந்த ஒத்திகை வெற்றிபெறவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், மதுரை வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சிவகாமிநாதன் (பேரிடர் மேலாண்மை), சுரேஷ் (மதுரை வடக்கு), மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.