தமிழகம்

சொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு – முதலமைச்சர் பெருமிதம்

சென்னை

சொன்னதை செய்யும் அரசு புரட்சித்தலைவி அம்மா அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;-

கேள்வி: கொரோனா காலத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பது சம்பந்தமாக

பதில்: பத்திரிகையாளர்கள் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு எதிர்பாராத விதமாக இறந்தால் அவர்களுக்கு நிவாரணம் ரூபாய் 5 லட்சம் கொடுப்போம் என்று அரசு அறிவித்ததுபோல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் ரூபாய் 3 ஆயிரமும் வழங்கப்பட்டுவிட்டது. அறிவித்ததை கொடுத்துவிட்டோம்.

கேள்வி: சசிகலா சிறையிலிருந்து வெளிவந்து அதிமுக-வுடன் இணைந்து செயல்பட நினைத்தால்…?

பதில்: தற்பொழுது இந்தக் கேள்வி எழத் தேவையில்லை. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்த வந்துள்ளேன். அதிலிருந்து ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள்.

கேள்வி: மீன்துறை சம்பந்தமாக கல்லூரிகள் இங்கு ஏதும் இல்லையே?

பதில்: ஏற்கனவே நாகப்பட்டினத்தில் ஒரு கல்லூரியை நாங்கள் துவக்கியுள்ளோம். ஒவ்வொரு இடத்திலும் படிப்படியாகத்தான் தொடங்க முடியும். அம்மாவின் அரசு ஏற்பட்டு, நான் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ரூபாய் 345 கோடி மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமேஸ்வரத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பெயரில் ஒரு அரசுக் கல்லூரி ஏற்படுத்தியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே மூன்று கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. சட்டக் கல்லூரியும் கொண்டு வந்துள்ளோம்.

ஒரே நேரத்தில் அரசு எல்லாவற்றையும் செயல்படுத்த முடியாது. ஒவ்வொன்றாகத்தான் கொண்டு வரமுடியும். நிதி ஆதாரம் இருந்தால் தான் செயல்படுத்த முடியும். அறிவித்து மட்டும் செல்வதில்லை, அறிவித்தவுடன் செயல்படுத்துகிற அரசு அம்மாவின் அரசு. மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி தொடங்கப்படுமென்று சொன்னவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சொன்னதைச் செய்கிற அரசு அம்மாவின் அரசு. காவேரி-குண்டாறு எனும் மிகப்பெரிய திட்டத்தை சுமார் ரூபாய் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதன்முதலாக அம்மாவின் அரசு தான் நிறைவேற்றவுள்ளது. வரும் ஜனவரி மாத இறுதிக்குள் இந்தத் திட்டம் துவக்கி வைக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.