தற்போதைய செய்திகள்

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்

சென்னை

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பேசியதாவது:-

காவேரி முதல் குண்டாறு வரை 259 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட வேண்டும். பகுதி-1ல் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு (118 கிலோ மீட்டர்) வரை. பகுதி-2ல் தெற்கு வெள்ளாறு முதல் வைகை (108 கிலோ மீட்டர்) வரை. பகுதி-3ல், வைகை முதல் குண்டாறு (33 கிலோ மீட்டர்) வரை. பகுதி-1க்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நில எடுப்பு செய்வதற்கு அரசாணை வழங்கப்பட்டு, வருவாய்த் துறையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நில எடுப்புப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த நிதியாண்டில், காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டம் பகுதி-2 செயல்படுத்தும்பொழுது, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பயன்பெறும்.

காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாயானது மானாமதுரை வட்டம், இடைக்காடு கிராமத்தில் வைகை நதியை கடந்து செல்கிறது. இவ்விடத்தில் 1,500 கனஅடி நீரை வைகை நதியில் திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கின்ற கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள், குட்டைகள் அனைத்தும் நிரப்பப்படும்.

இத்திட்டத்தின் மூலம் நான் ஏற்கனவே கூறியதைப் போல 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறும். இத்திட்டத்திற்கு தோராயமாக ரூபாய் 14,000 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இவ்வளவு அதிக செலவில் தமிழகத்தில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. இவ்வளவு செலவு செய்து, வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அம்மாவின் அரசுதான்.

பலர், விவசாயிகளுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே தெளிவு படுத்தியிருக்கிறேன், நான் ஒரு விவசாயி. விவசாயி குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் விவசாயிகள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் நன்றாக உணர்ந்து, அந்த விவசாயிகளுடைய துன்பங்களை களைய வேண்டுமென்பதற்காகத் தான் எவ்வளவு செலவானாலும் அதை நிறைவேற்ற வேண்டுமென்று தான் காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து, செயல்படுத்த இருக்கின்றோம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

அம்மாவின் அரசு மக்களுடைய அரசு, வேளாண் பெருமக்களுடைய அரசு, ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசு, அனைத்துத்தரப்பு மக்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.