தற்போதைய செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை – முதலமைச்சர் உறுதி

சென்னை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 116 கிராமங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வேளாண் தொழில், மீன்பிடி தொழில், பனைத்தொழில், உப்பு உற்பத்தி தொழில், சுற்றுலா ஆகிய தொழில்களை பிரதானமாக எடுத்துக் கொண்டு, அம்மாவின் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அதுமட்டுமல்ல, விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

2016-2017ஆம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,40,636 விவசாயிகளுக்கு ரூபாய் 146 கோடி இடுபொருள் நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 3,50,220 விவசாயிகளுக்கு ரூபாய் 1,316 கோடி என அதிகளவு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்தது அம்மாவின் அரசு.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 116 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 69,000 விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கப் பெறவில்லையென்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்த இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருவதற்கு நம் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதேபோல இம்மாவட்டத்தில் பல தொழிற்சாலைகளை உருவாக்கவும் அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணக்குடி தொழிற் பூங்கா, சக்கரக்கோட்டை தொழிற்பூங்கா ஆகிய தொழிற்பூங்காங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணக்குடி தொழிற்பூங்காவில் ரூபாய் 200 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 7,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இதில் 30 ஜவுளித்தொழிற்சாலைகள் உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சக்கரக்கோட்டை தொழிற்பூங்காவில், கடல் உணவு உற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு ரூபாய் 150 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 4,500 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைப்பதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல, ஆழ்கடல் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்கு நான் ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது, படகுகள் வாங்குவதற்காக மீனவர்களுக்கு மானியம் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்திருந்தேன். மத்திய அரசு, அந்தக் கோரிக்கையை ஏற்று, ஒரு படகு கட்டுவதற்கு ஆகும் செலவான 80 லட்சத்தில், 50 சதவீதம் மத்திய அரசும் (40 லட்சம் ரூபாய்), 20 சதவீதம் மாநில அரசும் (16 லட்சம் ரூபாய்) மானியமாக கொடுக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 22 ஆழ்கடல் படகுகள் ரூபாய் 17.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதற்காக 70 சதவிகித மானியமாக 12.35 கோடி ரூபாய் அரசு வழங்கியிருக்கிறது. இன்னும் 232 மீனவர்களுக்கு, இந்தத் திட்டத்தின் வாயிலாக மானியம் வழங்கப்படும்.

அம்மாவின் அரசு, மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூரில் ரூபாய் 128.7 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டு, என்னால் திறக்கப்பட்டு, இன்றைக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, ராமேஸ்வரம், குந்துகால் கிராமத்தில் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.