தற்போதைய செய்திகள்

பஞ்சாப் நடைமுறையை, தமிழகத்தில் பின்பற்ற சொல்கிறாரா ஸ்டாலின்? முதலமைச்சர் கேள்வி

சென்னை

பஞ்சாப் மாநிலத்தில் வணிகர்களிடமிருந்து 8.5 சதவீத கட்டணம் வசூலிப்பதுபோல இங்கு பின்பற்றச் சொல்கிறாரா என்று ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய விளைபொருட்களான நெல், கோதுமைக்கு சந்தைக் கட்டணம் மூன்று சதவீதத்துடன், மூன்று சதவீதம் உள்ளாட்சி மேம்பாட்டு மேல் வரியாக வசூலிக்கப்பட்டு, அந்த மேல்வரி அரசு கணக்கில் சேர்க்கப்படுகிறது. இதுதவிர, 2.5 சதவீதம் இடைத்தரகர்களுக்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக மொத்தம் 8.5 சதவிகிதம் வணிகர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதை ஸ்டாலின் பின்பற்றச் சொல்கிறாரா? இந்தச் சட்டத்தின் மூலம் இந்த வரியை வசூலிக்கக்கூடாதென மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டதை இவர்கள் எதிர்க்கிறார்கள். இதை எதிர்ப்பதன் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டிய லாபம் போய்விடுகிறது.

இந்த 8.5 சதவிகிதத்தை கூடுதலாக கொடுத்து வாங்கும் வியாபாரிகள், இடைத்தரகர்கள் ஏதுமில்லாமல் விவசாயிகளிடம் வாங்கும்பொழுது, விவசாயிக்கு கூடுதல் விலை கிடைக்கிறது. அதனால் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம். இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என்ற காரணத்தால், இடைத்தரகர்களும், பஞ்சாப் அரசும் இதை எதிர்க்கிறது. வருடம் ரூபாய் 2 ஆயிரம் கோடி பஞ்சாப் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், நமது மாநிலத்தில் வேறு நிலைமை.

பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அரசு மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் கோதுமை மற்றும் நெல் பெருமளவு கொள்முதல் செய்யப்படுவதால் அது நிறுத்தப்பட்டு விடுமென்ற வதந்தி பரப்பப்படுவதால், தேவையில்லாத பயத்தினால் மட்டுமே பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை கொள்முதல் நிறுத்தப்படாதென்று உறுதிமொழியை பிரதமரும், மத்திய அரசும் ஏற்கனவே அறிவித்துள்ளதால் விவசாயிகள் பயமேதும் கொள்ளத் தேவையில்லை.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை 2006-ஆம் ஆண்டு முதல் முழுமையாக மூடிவிட்டார்கள். தனியார் சந்தைகள் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதால் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகிய இருவரிடமிருந்தும் சந்தைக் கட்டணம் வசூலிக்கும் சூழல் தற்போது நிலவி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டிலுள்ள 282 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறம்பட செயல்பட்டு வேளாண் விளைபொருட்களின் உயிர் நாடியாக விளங்குகின்றன. அதனால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்டு, முழுமையான போட்டி உருவாக்கப்பட்டு, விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யப்பட்டு, வேளாண் பெருமக்கள் லாபம் கிடைக்க, பயன் கிடைக்க, நன்மை கிடைக்க எங்களுடைய அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.