தற்போதைய செய்திகள்

பரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ.8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை முதலமைச்சர் தகவல்

சென்னை

பரமக்குடி,செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூ 8.50 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனை செய்துவருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய பேசியதாவது.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தமிழகம், இந்தியா மட்டுமன்றி, உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க, முக்கிய புனிதத்தலமாக விளங்கக்கூடிய ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனை செய்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண் தொழில், மீன்பிடித் தொழில் ஆகிய இரண்டு தொழில்களும் பிரதான தொழில்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு தொழில்களுக்கும் முன்னுரிமை கொடுக்கும் அரசாக அம்மாவின் அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் பெருமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வறட்சியான பகுதிகளில் வாழும் மக்களுக்கு, கோடை காலத்திற்குத் தேவையான நீர் கிடைக்க கூடிய சூழ்நிலை குடிமராமத்து என்னும் சிறப்பான திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசால் குடிமராமத்து திட்டம், கிராமப்பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஊரணிகளில் பொதுப்பணித் துறையின் கீழ் வருகிற நீர்நிலைகளை பொதுப்பணித் துறையும், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வருகிற நீர்நிலைகளை ஊராட்சி ஒன்றியங்களும், முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்புடன் வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில்

ரூபாய் 48.50 கோடி மதிப்பீட்டில் விவசாய பங்களிப்போடு 94 குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2020-21-ம் ஆண்டு ரூபாய் 31 கோடி மதிப்பீட்டில் 44 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 70 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் மூலம் பருவகாலங்களில் பொழிகின்ற மழை நீர் ஒரு சொட்டு கூட வீணாக்காமல் ஏரிகளில் சேமித்து வைக்கப்பட்டு, கோடை காலத்தில் வேளாண்மைக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், நதிகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு அம்மாவின் அரசு மூன்று ஆண்டு காலத் திட்டம் வகுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுப்பணைகள் கட்டி, மழை காலத்தில் பொழிகின்ற நீரை சேமித்து நிலத்தடி நீர் உயர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நபார்டு நிதியுதவியுடன் மண்டபம் ஒன்றியம், சாந்தப்பகோன் வலசை கிராமம், மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் ரூபாய் 11.15 கோடி மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயை ரூபாய் 18.82 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி துவங்கப்படவுள்ளது.

ராமநாதபுரம், பெரிய கண்மாய்க்கு நீர்வரத்து பெறுவதற்கு வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தலைமதகில் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீர்போக்கி அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கின்றது. பரமக்குடி, செவ்வூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. பரமக்குடி வட்டம், சூடியூர் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருக்கின்றது. இது போன்ற பல திட்டங்கள் அம்மா அரசின் பரிசீலனையில் இருக்கின்றது. இத்திட்டங்கள் நிறைவேறும்போது மழைக்காலங்களில் பொழிகின்ற நீர் வீணாகாமல் ஆங்காங்கே தடுப்பணைகள் மூலமாக சேமித்து வைக்கப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.