சிறப்பு செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா, தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் பேச்சு

சென்னை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா,தொழிற் பூங்கா அமைக்க அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவுப் பூங்கா அமைப்பதற்கும், வனக்குடி தொழிற் பூங்கா, சக்கரக்கோட்டை தொழிற் பூங்கா அமைப்பதற்கும் அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டுமென்று அம்மாவின் அரசு நீண்டகால திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இப்படி தென்மாவட்டங்களில், குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில்கள் துவங்குபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தொழிற்சாலைக்கான நிலத்தில் 50 சதவீதம் மானியமாக கொடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலைகளுக்கு அனைத்து அனுமதிகளும் உடனடியாக வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய மாவட்டங்களில் புதிய தொழில் துவங்குவதற்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுக்கும் அரசு அம்மாவின் அரசு. இதனால், தென் மாவட்டங்களில் இருக்கும் மக்கள், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டம் போன்ற மாவட்டங்களில் புதிய தொழில்கள் வரும்பொழுது, இங்குள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டமான காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் துவங்கப்பட்டு விட்டன. இதன் மூலம், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும். காவேரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து உபரிநீராக வெளியேறி கடலில் கலக்கின்ற நீரை வறட்சியான பகுதிகளுக்கு கால்வாய் வெட்டி திருப்பி விடுவதன் மூலம் வறட்சியான பகுதிகளிலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு, கோடை காலங்களில் வேளாண் பெருமக்களுக்கும், குடிப்பதற்கும் நீர் கிடைக்கும். அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட அந்தத் திட்டத்தை பல்லாயிரக்கணக்கான செலவில் அம்மாவின் அரசு செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.